அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு இந்தியர் பலி மற்றொருவர் கவலைக்கிடம்


அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு இந்தியர் பலி மற்றொருவர் கவலைக்கிடம்
x
தினத்தந்தி 10 Feb 2018 3:30 AM IST (Updated: 10 Feb 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் பிளாய்ட் கவுண்டியில் பர்னட் பெர்ரி சாலையில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றி வந்தவர் பரம்ஜித் சிங் (வயது 44). இந்திய வம்சாவளி.

வாஷிங்டன்,

பரம்ஜித் சிங் கடந்த 6–ந் தேதியன்று மாலையில் கடையில் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் அவரை சரமாரியாக சுட்டு வீழ்த்தி விட்டு சென்றார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலி ஆனார். சம்பவத்தின் போது அவர் அருகே நின்று கொண்டு இருந்த பெண் ஊழியர் காயம் இன்றி தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர் அடுத்த 10–வது நிமிடத்தில் மற்றொரு கடைக்குள் நுழைந்தார். அங்கு இருந்த பணத்தை கொள்ளையடித்தார். அத்துடன் பணியில் இருந்த இந்திய வம்சாவளி ஊழியர் பார்த்தி பட்டேலை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு சென்றார்.

குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த பார்த்தி பட்டேல் அங்கு இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

முதல் சம்பவத்தில் கொலையாளி, கடையில் கொள்ளை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை என்றும், கடைக்குள் நுழைந்ததுமே பரம்ஜித் சிங்கை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கி விட்டார் என்றும் ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகள் காட்டுவதாக பிளாய்ட் கவுண்டி போலீஸ் அதிகாரி மேஜர் ஜெப் ஜோன்ஸ் தெரிவித்தார்.

இந்த சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவரது பெயர் லாமர் ரஷாத் நிக்கல்சன் (28).

சுட்டுக்கொல்லப்பட்ட பரம்ஜித் சிங், உயர்நிலைப்பள்ளியில் படிக்கிற 2 பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. 8 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அமெரிக்காவில் குடியேறியதாக அவரது சகோதரர் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story