செக்ஸ் குற்றச்சாட்டால் நெருக்கடி ஆஸ்திரேலிய துணைப்பிரதமர் ராஜினாமா


செக்ஸ் குற்றச்சாட்டால் நெருக்கடி ஆஸ்திரேலிய துணைப்பிரதமர் ராஜினாமா
x
தினத்தந்தி 23 Feb 2018 10:45 PM GMT (Updated: 23 Feb 2018 6:03 PM GMT)

ஆஸ்திரேலிய நாட்டில் மார்கம் டர்ன்புல் கூட்டணி அரசில் துணைப் பிரதமராக இருந்து வருபவர், பர்னபி ஜாய்ஸ் (வயது 50).

சிட்னி,

பர்னபி ஜாய்ஸ் திருமணமாகி 24 ஆண்டுகள் மண வாழ்க்கை நடத்திய நிலையில், தனது முன்னாள் ஊடக ஆலோசகருடன் செக்ஸ் தொடர்பு வைத்துக்கொண்டார் என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது அங்கு அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பர்னபி ஜாய்ஸ் 26–ந் தேதி துணைப்பிரதமர் பதவியையும், கட்சித்தலைவர் பதவியையும் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து உள்ளார். கான்பெர்ரா நகரில் நடக்க உள்ள தனது நே‌ஷனல்ஸ் கட்சிக்கூட்டத்தில் பதவி விலகப்போவதாக கூறி உள்ளார்.

அதே நேரத்தில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகப்போவது இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். தனது பதவி விலகல் முடிவை அவர் பிரதமர் மார்கம் டர்ன்புல்லுக்கு தெரிவித்து விட்டதாகவும் கூறி உள்ளார்.

தனக்கு பதிலாக நே‌ஷனல்ஸ் கட்சித் தலைவர் பதவியையும், துணைப்பிரதமர் பதவியையும் ஏற்கப்போவது யார் என அவர் தெரிவிக்கவில்லை. இருந்தபோதும், மூத்த மந்திரியான மைக்கேல் மெக்கார்மக் பெயர் அடிபடுகிறது.

தன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துவந்த போதும் அவை யாவும் தாக்குப்பிடிக்க முடியாமல் போனதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். தனக்கு இதுவரை ஆதரவு தெரிவித்து வந்து உள்ள தொகுதி மக்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்தார். அதில் அவர், ‘‘நீங்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு நான் தகுதியானவன் அல்ல’’ என உருக்கமுடன் குறிப்பிட்டு உள்ளார்.

துணைப் பிரதமர் பர்னபி ஜாய்ஸ் பதவி விலகல் முடிவை, பிரதமர் மால்கம் டர்ன்புல் வரவேற்று உள்ளார்.


Next Story