

வாஷிங்டன்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஐ.எஸ். அமைப்பினர் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் நாட்டில் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், போரால் சீரழிந்த ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டு வருவதற்காக இந்தியா, அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகள் 4வது முறையாக முத்தரப்பு கூட்டத்தினை நடத்தியது.
இந்த சந்திப்பில், இந்திய தரப்பில் தூதரக இணை செயலர் தீபக் மிட்டல், ஆப்கானிஸ்தானின் துணை வெளியுறவு துறை மந்திரி ஹெக்மத் கர்சாய் மற்றும் அமெரிக்காவின் அலைஸ் வெல்ஸ் ஆகியோர் தலைமையிலான குழு கலந்து கொண்டது.
ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு, அமைதி, ஜனநாயகம், பன்முக தன்மை மற்றும் தீவிரவாதத்தில் இருந்து விடுபட்டு வளமிக்க நாடாவதற்கு தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றுவது என 3 நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.
அரசியல், பொருளாதாரம், கல்வி மற்றும் வளர்ச்சிக்கான இலக்குகள் பற்றிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஆப்கானிஸ்தானின் பல பிரிவுகளில் பொருளாதார மற்றும் மண்டல நிலை தன்மையை வலுப்படுத்துவதற்கு முத்தரப்பு ஒத்துழைப்பு வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது என அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பு பெண் அதிகாரி ஹெதர் நவெர்ட் கூறியுள்ளார்.