

வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை தென் கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுங் யுய் யோங் தலைமையிலான தூதுக்குழுவினர் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள், நாங்கள் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது அவர் உங்களை சந்தித்து பேச விருப்பம் தெரிவித்தார் என்று கூறினர்.
அதை டிரம்பும் ஏற்றுக்கொண்டு, கிம் ஜாங் அன்னை சந்திக்க ஒப்புதல் அளித்தார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் சாரா சாண்டர்ஸ் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் எங்கு எப்போது சந்தித்துப் பேசுவார்கள் என்பது இனிதான் முடிவு செய்யப்பட வேண்டும். வடகொரியாவுடனான ஒப்பந்தம் தயாராகிக்கொண்டு இருக்கிறது. அது நிறைவு செய்யப்படுகிறபோது, உலகத்துக்கு மிகவும் நல்லது.
வடகொரியா அணு ஆயுதங்களை கை விடுவதற்கு அமெரிக்கா கூடுதல் அழுத்தம் கொடுக்கும். வடகொரியா அளித்து உள்ள வாக்குறுதிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்காதவரையில், இந்த சந்திப்பு நடைபெறாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு இடையே வடகொரிய விவகாரத்தில் ஏற்பட்டு உள்ள முன்னேற்றம் தொடர்பாக ஜனாதிபதி டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே உள்ளிட்ட தலைவர்களுடன் தொலைபேசியில் பேசி ஆலோசனை நடத்தினார்.