முன்னாள் உளவாளிக்கு விஷம்: 23 ரஷிய தூதரக அதிகாரிகள் வெளியேற ‘கெடு’ இங்கிலாந்து அதிரடி


முன்னாள் உளவாளிக்கு விஷம்: 23 ரஷிய தூதரக அதிகாரிகள் வெளியேற ‘கெடு’ இங்கிலாந்து அதிரடி
x
தினத்தந்தி 14 March 2018 7:38 PM IST (Updated: 14 March 2018 7:38 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் ரஷிய உளவாளிக்கு விஷம் ஏற்றப்பட்டதற்கு ரஷியாவே பொறுப்பு என இங்கிலாந்து கூறிஉள்ளது. #SergeiSkripal


லண்டன்,

 
ரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). இவர் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு இங்கிலாந்து மீட்டு அடைக்கலம் கொடுத்தது. தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் விஷம் ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

தற்போது இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் இங்கிலாந்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஆலோசனை நடத்தினார். ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் ரஷியா இருக்கலாம் என கூறப்பட்டது. அவ்வாறு ரஷியாவின் தலையீடு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் போரிஸ் ஜான்சன் கூறினார். இருப்பினும் குற்றச்சாட்டை ரஷியா மறுத்தது.

ரஷியாதான் பொறுப்பு

இந்நிலையில் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றப்பட்டதற்கு ரஷியாவே பொறுப்பு என இங்கிலாந்து கூறிஉள்ளது.

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் தெரசா மே, ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றப்பட்டதற்கு ரஷிய அரசுதால் கொலைமுயற்சி குற்றவாளியாகும் என தெரிவித்து உள்ளார். இங்கிலாந்து 23 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றுகிறது. உயர்மட்ட இருதரப்பு தொடர்பையும் இங்கிலாந்து துண்டித்து உள்ளது. ரஷியா உடனான உயர்மட்ட தொடர்பை இங்கிலாந்து ரத்து செய்யும், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ராவ் இங்கிலாந்து வருவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பையும் திரும்ப பெறுகிறோம் என தெரசா மே கூறிஉள்ளார். 

இங்கிலாந்து 23 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உள்ளது, அவர்கள் வெளியேற ஒருவார காலம் அவகாசம் வழங்கப்படுகிறது. வெளியேற்றப்படும் ரஷிய தூதரக அதிகாரிகள் அறிவிக்கப்படாத உளவுத்துறை அதிகாரிகள் எனவும் தெரசா மே கூறிஉள்ளார் என பிபிசி செய்தி வெளியிட்டு உள்ளது. ரஷியாவின் செயல்பாடு உள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது எனவும் இங்கிலாந்து ஸ்திரமாக கூறிஉள்ளது.

1 More update

Next Story