சிரியாவின் கிழக்கு கூட்டாவில் வான் தாக்குதல்

சிரியாவின் கிழக்கு கூட்டாவில் வான்தாக்குதலில் 15 சிறுவர்கள் உள்பட 17 பேர் பலியானார்கள்.
டமாஸ்கஸ்,
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் இடையேயான உள்நாட்டுப்போர் 8–வது ஆண்டாக நீடித்து வருகிறது.
அங்கு தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள கிழக்கு கூட்டா பகுதியை மீட்பதற்காக கடந்த மாதம் அதிபர் ஆதரவு படைகள் தாக்குதலை தொடங்கின. இந்த தாக்குதல்களில் ஏதுமறியாத குழந்தைகள் உள்பட அப்பாவி மக்கள் ஏராளமானோர் பலியாகி வருகின்றனர்.
சண்டை நிறுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. இதனால் அதிபர் படைகளும், அவர்களுக்கு ஆதரவாக ரஷிய படைகளும் தொடர்ந்து வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு கிழக்கு கூட்டாவில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தை குறிவைத்து போர் விமானங்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தின. அந்த பள்ளிக்கூடத்தின் கீழ் தளத்தை வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான பாதுகாப்பு அரணாக அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இருப்பினும் தொடர்ந்து 3 ஏவுகணைகள் வீசப்பட்டதால் பள்ளிக்கூடம் தரைமட்டமாகி விட்டது.
இதில் 15 சிறுவர்கள், 2 பெண்கள் என 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என தெரிகிறது. அவர்களை மீட்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இந்த தகவலை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சிரிய மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது. இந்த வான்தாக்குதலை ரஷிய படைகள்தான் நடத்தியிருக்கக்கூடும் என அந்த கண்காணிப்பகம் கூறுகிறது.
அதே சமயம், கிழக்கு கூட்டாவில் போரை முடிவுக்கு கொண்டுவர அரசுப்படைக்கு உதவுகிறோமே தவிர, அப்பாவி மக்கள் மீது வான்தாக்குதல்கள் நடத்துவதில்லை என ரஷியா தெரிவிக்கிறது.






