‘ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுத்தர மாட்டோம்’ அதிபர் ஜின்பிங் பரபரப்பு பேச்சு

‘ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுத்தர மாட்டோம்’ அதிபர் ஜின்பிங் பரபரப்பு பேச்சு

சீனாவின் இறையாண்மையை பாதுகாப்போம்; ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுத்தர மாட்டோம் என அதிபர் ஜின்பிங் கூறினார்.
Published on

பீஜிங்,

இந்தியா, சீனா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது.

தென் சீனக்கடல் மீது வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே, தைவான் உள்ளிட்ட நாடுகள் உரிமை கொண்டாடுகிற வேளையில், சீனா மொத்தமாக உரிமை கொண்டாடி வருகிறது. அங்கு செயற்கை தீவுகளை உருவாக்கி உள்ளது. இது தொடர்பாக நீண்ட காலமாக சர்ச்சை நிலவி வருகிறது.

இந்த சூழலில் சீன அதிபராக தொடர்ந்து 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜின் பிங் பதவி ஏற்று உள்ளார். இந்த 5 ஆண்டு கால பதவிக்காலம் முடிந்தபின்னரும் அவர் பதவியில் தொடருவதற்கு ஏற்ற வகையில், அந்த நாட்டின் அரசியல் சாசனம் திருத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சீன நாடாளுமன்றத்தின் 18 நாள் அமர்வின் நிறைவில், ஜின் பிங் நேற்று பேசினார்.

30 நிமிடங்கள் நீடித்த இந்த உரையின்போது அவர் கூறியதாவது:

சீன மக்களும், சீன நாடும் நமது நிலத்தின் ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுக் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

நாட்டின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் நாம் பாதுகாப்போம். நமது தாய்நாட்டின் முழுமையான ஒருங்கிணைப்பை அடைந்து சாதிப்போம். இது அனைத்து சீன மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். இதுதான் சீன நாட்டின் அடிப்படையும் கூட.

நமது நாட்டின் மற்றும் வரலாற்றின் முக்கியமான கேள்வியை எதிர்கொண்டு, நாட்டைப் பிரிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் தோல்விதான் அடையும்.

பிரிவினைவாதிகளின் அனைத்து செயல்களில் இருந்தும் வெற்றிகொள்வதற்கு நமக்கு தகுதி உள்ளது என சீன மக்கள் திடமாக நம்புகின்றனர். முழு நம்பிக்கை வைத்து உள்ளனர்.

மக்கள் சேவகனாக நான் தொடர்ந்து பணி ஆற்றுவேன்.

சீனாவின் வளர்ச்சி, எந்தவொரு நாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமையாது. சீனா மேலாதிக்கத்திலோ அல்லது விஸ்தரிப்பிலோ ஈடுபடாது.

மற்றவர்களை அச்சுறுத்துகிற வழக்கம் உடையவர்கள்தான், மற்றவர்களை அச்சுறுத்தலாக பார்க்கிறார்கள். (அமெரிக்காவை பெயர் குறிப்பிடாமல், இப்படி சாடினார்.)

சீன மக்களின் உண்மையான ஆசை, நடைமுறை செயல்கள் எல்லாமே மனித குலத்தின் சமாதானத்துக்கும், வளர்ச்சிக்கும் பங்களிப்பதை யாரும் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.

சீனா தனது விருப்பத்தை யார் மீதும் திணிக்காது.

சீன அதிபர் என்ற மிகப் பெரிய பொறுப்பை எனக்கு அளித்து இருக்கிறீர்கள். இது புகழ்மிக்க பணியாகும்.

நான் எப்போதுமே அரசியல் சாசனம் அளித்து உள்ள பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்றுவேன். தாய்நாட்டுக்கும், மக்களுக்கும் விசுவாசமாக நடந்து கொள்வேன். என் கடமையை மிகச்சிறப்பாக செய்வேன். அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பேன். எல்லா அதிகாரிகளும், சீன மக்களின் மேற்பார்வையின்கீழ்தான் இருப்பார்கள்.

எத்தனை உயரிய பொறுப்பில் ஒருவர் இருந்தாலும்கூட, அனைவருமே நமது நாடு, சீன மக்களின் குடியரசு என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

சீன ராணுவமும் சரி, அனைத்து அரசு அமைப்புகளும் சரி, ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையின் கீழ்தான் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com