ரஷ்ய அதிபராக 2 வது முறையாக தேர்வான புதினுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து


ரஷ்ய அதிபராக 2 வது முறையாக தேர்வான புதினுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து
x
தினத்தந்தி 21 March 2018 11:56 AM IST (Updated: 21 March 2018 11:56 AM IST)
t-max-icont-min-icon

ரஷ்ய அதிபராக 2 வது முறையாக தேர்வான விளாடிமிர் புதினுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. #TrumpPutin

வாஷிங்டன்,

கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் இரண்டாவது முறையாக அமோக வெற்றி பெற்று அதிபராக தேர்வானார். புதினுக்கு பல நாட்டுத்தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார். மேலும் இந்த உரையாடலில் இரு நாட்டுத் தலைவர்களும் அமெரிக்க ரஷ்ய நாட்டின் உறவு குறித்தும், வருங்காலங்களில் இருவரின் சந்திப்பு குறித்தும் பேசியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த உரையாடல் குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் கூறுகையில், ”ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற விளாடிமிர் புதினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தேன். நாங்கள் இரு நாட்டு உறவு குறித்தும், எதிர்காலத்தில் சந்திக்கும் வாய்ப்பு குறித்தும் உரையாடினோம். கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத முக்கியத்துவம் குறித்தும், நாடுகள் ஆயுதப்போரில் ஈடுபடுவது ஒரு சிறந்த வழி அல்ல என்றும் உரையாடி கொண்டோம். மேலும் சிரியா, வட கொரியா மற்றும் பல்வேறு பிரச்சினைகள் பற்றியும் விவாதித்தோம்.இந்த அழைப்பு, மிக அரிதான ஒன்று தான். எதிர்காலத்தில் நாம் ஒன்றாக சேர்ந்து செயல்படுவோம் என்பதற்கேற்ப நல்ல உரையாடலாக இந்நிகழ்வு அமைந்தது” எனக் கூறினார்.

முன்னதாக கடந்த இருபது ஆண்டுகளாக அதிபர் பதவி வகிக்கும் விளாடிமிர் புதினுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story