ரஷிய நாட்டில் எதிர்க்கட்சி தலைவர், ஆதரவாளர்களுடன் கைது


ரஷிய நாட்டில் எதிர்க்கட்சி தலைவர், ஆதரவாளர்களுடன் கைது
x
தினத்தந்தி 7 May 2018 4:15 AM IST (Updated: 7 May 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

ரஷிய அதிபராக புதின் இன்று மீண்டும் பதவி ஏற்கும் நிலையில், எதிர்த்து போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி தலைவர், ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டார்.

மாஸ்கோ,

ரஷிய நாட்டில் 2000-ம் ஆண்டில் இருந்து விளாடிமிர் புதின் (வயது 65) அதிபராகவோ, பிரதமராகவோ தொடர்ந்து பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் புதினுக்கு எதிராக பவல் குருதினின், விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கை, செர்கெய் பாபுரின், கிரிகோரி யாவ்லின்ஸ்கை, போரிஸ் டிட்டோவ், கெசெனி சோப்சாக், மேக்சிம் சுராய்கின் என 7 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், முக்கிய எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நாவல்னி, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் 77 சதவீத ஓட்டுகளை பெற்று புதின் அபார வெற்றி பெற்றார்.

மாஸ்கோவில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிற விழாவில் புதின் மீண்டும் அதிபராக பதவி ஏற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆனால் புதின் பதவி ஏற்பதற்கு எதிராக அலெக்சி நாவல்னி, போர்க்கொடி உயர்த்தி நாடு முழுவதும் 90-க்கும் மேற்பட்ட நகரங்களில் நேற்று முன்தினம் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து இருந்தார்.

அந்த அழைப்பின்படி நேற்று முன்தினம் ரஷிய நகரங்களில் போராட்டங்கள் நடந்தன.

மத்திய மாஸ்கோ பகுதியில் அலெக்சி நாவல்னி, சுமார் 1,600 ஆதரவாளர்களுடன் திரண்டு வந்து போராட்டம் நடத்தினார். இதில் புதின் பதவி ஏற்புக்கு எதிராக அவர்கள் கோஷங்களை முழங்கினர்.

போராட்டக்காரர்கள் மத்தியில் அலெக்சி நாவல்னி பேசினார். அப்போது அவர், “மாஸ்கோ நகரம், புதினுக்கு உரியது என்று சொல்கிறார்கள். அது சரியா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு கூட்டத்தினர் ஒருமித்த குரலில் “இல்லை” என்று கூறினர்.

அனைவரும் “புதின் இல்லாத ரஷியா, புதின் திருடன்” என்றெல்லாம் கோஷங்களை முழங்கினர்.

அதைத் தொடர்ந்து அலெக்சி நாவல்னியும், அவரது ஆதரவாளர்கள் 1,600 பேரும் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், நேற்று அதிகாலையில், தான் போலீஸ் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும், 11-ந் தேதி கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும் என்றும் அலெக்சி நாவல்னி சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு உள்ளார்.

உரிய அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதாகவும், போலீசுக்கு பணியாமல் அவ்வாறு செய்ததாகவும் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அலெக்சி நாவல்னி குறிப்பிட்டு உள்ளார். 
1 More update

Next Story