பாலியல் புகாருக்கு ஆளான ஹாலிவுட் பட அதிபர் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு பதிவு


பாலியல் புகாருக்கு ஆளான ஹாலிவுட் பட அதிபர் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு பதிவு
x
தினத்தந்தி 1 Jun 2018 4:15 AM IST (Updated: 1 Jun 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

100-க்கு மேற்பட்ட பெண்களின் பாலியல் புகாருக்கு ஆளான ஹாலிவுட் பட அதிபர் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு பதிவு.

நியூயார்க்,

பிரபல ஹாலிவுட் பட அதிபர் ஹார்வி வெயின்ஸ்டீன் (வயது 66). இவர் மீது ஹாலிவுட் பிரபலங்கள் ஏஞ்சலினா ஜோலி, சல்மா ஹாயெக், ஆஷ்லே ஜூட் போன்றோர் உள்பட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக சுமத்தி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை அவரது பாலியல் லீலைகளை அம்பலத்துக்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து, அவரது வாழ்க்கைப்பாதையும் இறங்குமுகத்துக்கு வரத் தொடங்கியது.

இந்த நிலையில், அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வதற்காக கடந்த வாரம் நியூயார்க் போலீசில் சரண் அடைந்தார். பின்னர் 1 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6¾ கோடி) ரொக்க ஜாமீனில் வெளியே வந்தார்.

அதைத் தொடர்ந்து இப்போது அவர் மீது கற்பழிப்பு, பாலியல் குற்றச்செயல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மேன்ஹட்டன் மாவட்ட அட்டார்னி சைரஸ் வான்ஸ் ஜூனியர் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “ஹார்வி வெயின்ஸ்டீன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்து இருப்பது, அவர் செய்த பாலியல் குற்றச்செயல்களுக்கு பொறுப்பேற்க வைக்கிற அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது” என்று கூறினார்.

அதே நேரத்தில் ஹார்வி வெயின்ஸ்டீன் வக்கீல் பெஞ்சமின் பிராப்மேன், “ஹார்வி வெயின்ஸ்டீன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து இருப்பது ஒன்றும் வியப்புக்கு உரியது அல்ல; குற்றச்சாட்டு பதிவு என்பது வெறுமனே சட்டப்படி குற்றம் சாட்டுவது மட்டும்தான்” என்று குறிப்பிட்டார்.

இருப்பினும் ஹார்வி வெயின்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. கோர்ட்டு விசாரணை அடுத்த மாதம் (ஜூலை) 30-ந் தேதி நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story