கவுதமாலாவில் எரிமலை வெடிப்பு; பலி எண்ணிக்கை 99 ஆக உயர்வு


கவுதமாலாவில் எரிமலை வெடிப்பு; பலி எண்ணிக்கை 99 ஆக உயர்வு
x
தினத்தந்தி 7 Jun 2018 6:31 AM GMT (Updated: 7 Jun 2018 6:31 AM GMT)

கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.

கவுதமாலா சிட்டி,

கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு அருகே அமைந்துள்ளது.  கடந்த ஞாயிற்று கிழமை இந்த எரிமலை திடீரென்று வெடித்து சிதறியது.  இதில் இருந்து 700 டிகிர் செல்சியஸிற்கும் கூடுதலான வெப்பம் கொண்ட லாவா வெளியேறியதுடன் கரும்புகை மற்றும் சாம்பலானது தலைநகர் உள்பட பிற பகுதிகளுக்கு பரவின.

எரிமலையில் இருந்து 10 கி.மீட்டர் உயரத்துக்கும் மேல் சாம்பல் புகை வெளியேறியது.  பல கிராமங்கள் புதைந்து போயுள்ளன.  அங்குள்ள வீடுகள், மரங்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவை சாம்பலால் மூடப்பட்டு உள்ளன.  இது மீட்பு பணியில் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி வேறு இடங்களுக்கு தப்பி சென்றுள்ளனர்.  இந்த நிலையில் எரிமலை நேற்று மீண்டும் வெடித்துள்ளது.  அதில் இருந்து வெப்ப வாயு மற்றும் உருகிய நிலையிலான பாறைகள் ஓடை போல் வெளிவருகின்றன.  கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக பெரிய அளவில் இந்த எரிமலை வெடிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி தேசிய தடய அறிவியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், எரிமலை வெடிப்பினால் பலியான 99 பேரின் உடல்கள் கிடைத்துள்ளன.  அவற்றில் 28 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எரிமலை வெடிப்பினை தொடர்ந்து இதுவரை 200 பேரை காணவில்லை.  அவர்களை தேடும் பணியில் முகமூடி அணிந்தபடி எச்சரிக்கையுடன் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பியூகோ என்றால் ஆங்கிலத்தில் தீ என பொருள்படும்.  இந்த எரிமலையருகே சுற்றுலாவாசிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியான ஆன்டிகுவா நகரமும் அமைந்துள்ளது.  இங்கு காபி தோட்டங்களும் அதிகம் காணப்படுகின்றன.

Next Story