தைவானில் அமெரிக்க தூதரகம் திறப்பு: சீனா கண்டனம்


தைவானில் அமெரிக்க தூதரகம் திறப்பு: சீனா கண்டனம்
x
தினத்தந்தி 13 Jun 2018 12:56 PM GMT (Updated: 13 Jun 2018 12:56 PM GMT)

தைவானில் அமெரிக்க தூதரகம் திறந்தற்கு சீனா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

தைவான் நாடு தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. தைவான் அதிபராக அதிபர் ட்ஸாய் இங்-வென் 2016ம் ஆண்டு பதவியேற்ற பின்னர் இவ்விவகாரத்தில் சீனாவின் அழுத்தம் கொடுத்து வருகிறது. மேலும் தென் சீனக்கடல் பகுதியையும் முழுவதுமாக  சீனா உரிமை கொண்டாடி அங்கு ராணுவ தளவாடங்களை குவித்து வருகிறது. இதற்கு, தைவான், பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  

தைவானுடன் இருந்த தூதரக உறவுகளை கடந்த 1979-ம் ஆண்டில் முறித்துகொண்டபோதிலும் தைவான் நாட்டிற்கு ஆதரவாக அமெரிக்க போர் ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது.   இந்தநிலையில்,  தைவானில் சுமார் 25 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய தூதரகத்தை அமெரிக்கா  திறந்துள்ளது. அமெரிக்கா - தைவான் பயிலகம் என இருந்த கட்டிடத்தை சீரமைத்து உருவாக்கப்பட்ட இந்த தூதரகத்துக்கு அமெரிக்க பிரதிநிதிகள் அலுவலகம் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தநிகழ்ச்சியில் அமெரிக்க கல்வி மற்றும் கலாச்சாரத்துறை துணை மந்திரி மேரி ராய்ஸ் கலந்து கொண்டார்.  இதன் மூலம் தைவான் - அமெரிக்கா இடையிலான நல்லுறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளதாக தைவான் அதிபர் ட்ஸாய் இங்-வென் குறிப்பிட்டுள்ளார்.

தைவானில் அமெரிக்க தூதரகம் திறந்தற்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சகம்  கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சீன வெளியுறத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவின் இந்த முடிவுக்கு சீனா  கண்டனமும், அதிருப்தியையும் பதிவு செய்கிறது.  சீனாவிற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தவறான செயல்பாடுகளை திருத்திக்கொண்டு, சீனா-அமெரிக்க உறவுகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story