பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் மு‌ஷரப் போட்டியிடுவதில் ‘திடீர்’ சிக்கல்


பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் மு‌ஷரப் போட்டியிடுவதில் ‘திடீர்’ சிக்கல்
x
தினத்தந்தி 13 Jun 2018 10:30 PM GMT (Updated: 13 Jun 2018 7:04 PM GMT)

பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25–ந் தேதி நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடக்க உள்ளது

இஸ்லாமாபாத்,

.தற்போது துபாயில் உள்ள முன்னாள் அதிபர் மு‌ஷரப், இந்த தேர்தலில் சிட்ரால் தொகுதியில் இருந்து போட்டியிட விரும்புகிறார். இதற்கு அவருக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கடந்த வாரம் அளித்தது.

அதாவது லாகூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கில் அவர் 13–ந் தேதி (நேற்று) ஆஜராக வேண்டும் என்பதே அந்த நிபந்தனை ஆகும். அதற்கு ஏற்ற வகையில் முடக்கி வைக்கப்பட்டிருந்த அவரது பாஸ்போர்ட், தேசிய அடையாள அட்டையை விடுவிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

அப்படி இருந்தும் அவர் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் அவர் 2013–ம் ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக பெஷாவர் ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து, பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘மு‌ஷரப் நாளை (இன்று) மதியம் 2 மணிக்குள் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும். அப்படி அவர் ஆஜராகாவிட்டால் சட்டத்துக்கு உட்பட்டு நாங்கள் முடிவு எடுத்து விடுவோம்’’ என அறிவித்தனர்.

இதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகும்.

இதுபற்றி நீதிபதிகள் குறிப்பிடுகையில், ‘‘மு‌ஷரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பட வேண்டியது இல்லை. மு‌ஷரப் நாடு திரும்பினால் பாதுகாப்பு அளிக்கிறோம் என நாங்கள் ஏற்கனவே அறிவித்து இருக்கிறோம். அதை எழுத்துமூலம் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒரு கமாண்டோ என்றால் அவர் நாடு திரும்பி அதை வெளிப்படுத்தட்டும்’’ என்று நீதிபதிகள் கூறினர். எனவே அவர் இன்று நாடு திரும்ப வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.


Next Story