ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தாக்குதலில் பாகிஸ்தான் தலீபான் தலைவர் பலி?

பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் தலைவர் மவுலானா பஸ்லுல்லா (வயது 44).
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தாக்குதலில் பாகிஸ்தான் தலீபான் தலைவர் பலி?
Published on

காபூல்,

மவுலானா பஸ்லுல்லா ஆப்கானிஸ்தானில் குணார் மாகாணம், நூர் குல் கலாய் கிராமத்தில் உள்ள ஒரு வளாகத்தில் தனது இயக்கத்தினருடன் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதை அமெரிக்கா அறிந்து, மவுலானா பஸ்லுல்லா இருந்த வளாகத்தின் மீது ஆளில்லா விமானத்தை கொண்டு தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் மவுலானா பஸ்லுல்லாவும், அவரது கூட்டாளிகள் 4 பேரும் பலியாகி விட்டனர் என உறுதி செய்யப்படாத தகவல்களை மேற்கோள்காட்டி வாய்ஸ் ஆப் அமெரிக்கா வானொலி செய்தி கூறியது.

2013ம் ஆண்டு, பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் தளபதி ஆன பின்னர் மவுலானா பஸ்லுல்லா பல்வேறு தாக்குதல்களை கட்டளையிட்டு நடத்தி உள்ளார். 2014ம் ஆண்டு, டிசம்பர் மாதம் நடந்த பெஷாவர் ராணுவ பள்ளிக்கூட தாக்குதல், 2012ம் ஆண்டு மலாலா கொலை முயற்சி போன்றவற்றில் இவரது கை வரிசை உண்டு.

இவரை அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதி என அறிவித்து, தலைக்கு 5 மில்லியன் டாலர் (சுமார் ரூ.34 கோடி) விலை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பாகிஸ்தான் தலீபான் இயக்கம், மவுலானா பஸ்லுல்லா கொல்லப்பட்டு விட்டார் என்ற அமெரிக்க தகவலை நிராகரித்தது. அவர் உயிருடன்தான் உள்ளார் என கூறியது. ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com