இரு வல்லரசுகள் இடையே வர்த்தகப் போர் அமெரிக்காவுக்கு சீனா பதிலடி


இரு வல்லரசுகள் இடையே வர்த்தகப் போர் அமெரிக்காவுக்கு சீனா பதிலடி
x
தினத்தந்தி 16 Jun 2018 10:45 PM GMT (Updated: 16 Jun 2018 7:45 PM GMT)

அமெரிக்க பொருட்களுக்கு சீனா ரூ.3.40 லட்சம் கோடி வரி விதித்தது. இதையடுத்து வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகப்போர் மூண்டது.

பீஜிங்,

வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நிலவி வந்த பனிப்போர், இப்போது வர்த்தகப் போராகி உள்ளது.

‘அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களை சீனா களவாடுகிறது. அமெரிக்க தொழில் நுட்பங்களை தன் நாட்டுக்கு சீனா கடத்திக்கொண்டு போகிறது’ என்பது சீனா மீது அமெரிக்கா சுமத்துகிற குற்றச்சாட்டு.

இதன் காரணமாக ஆண்டுக்கு 500 பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.34 லட்சம் கோடி) வர்த்தக பற்றாக்குறை ஏற்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார்.

இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்து உள்ள போதிலும், இதற்கு தண்டனை விதிப்பதுபோன்று அமெரிக்கா 50 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் கோடி) மதிப்பிலான சீனப்பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்து உள்ளது.

இது சீனாவுக்கு கடும் அதிர்ச்சியாக அமைந்தது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீனா கடுமையாக சாடியது.

உடனடியாக அமெரிக்காவுக்கு தகுந்த பாடம் கற்பிக்க சீனா முடிவு எடுத்தது.

இதையடுத்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகிற 50 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் கோடி) மதிப்பிலான பொருட்களுக்கு வரி விதிக்க சீனாவின் ஜின்பிங் அரசும் முடிவு எடுத்தது.

659 அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரியை சீனா விதிக்கிறது.

இந்த கூடுதல் வரி வரம்புக்குள் கொண்டு வரப்படுகிற அமெரிக்க பொருட்களின் பட்டியலையும் சீனா வெளியிட்டு உள்ளது.

அமெரிக்க விவசாய உற்பத்தி பொருட்கள், வாகனங்கள், நீர்வாழ் உற்பத்தி பொருட்கள் உள்ளிட்ட 545 பொருட்கள் மீது சீனா 34 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ. 2 லட்சத்து 31 ஆயிரத்து 200 கோடி) வரி விதித்து உள்ளது. இந்த வரி விதிப்பு அடுத்த மாதம் 6–ந் தேதி அமலுக்கு வரும் என சீன கலால் வரி ஆணையம் அறிவித்து உள்ளது.

ரசாயனப்பொருட்கள், மருத்துவ கருவிகள், எரிசக்தி பொருட்கள் உள்ளிட்ட மீதி 114 பொருட்களுக்கு 16 பில்லியன் டாலர் மதிப்பிலான கூடுதல் வரி விதிப்பு எப்போது அமலுக்கு வரும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான முடிவு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீதான சீன அன்னிய வர்த்தக சட்டம் மற்றும் விதிமுறைகள் மற்றும் சர்வதேச சட்டங்களின் அடிப்படை கோட்பாடுகள் அடிப்படையில் எடுக்கப்பட்டு உள்ளதாக சீனா கூறுகிறது.

அமெரிக்காவும் சீனப் பொருட்களுக்கு 34 பில்லியன் டாலர் அளவு (சுமார் ரூ. 2 லட்சத்து 31 ஆயிரத்து 200 கோடி) வரி விதித்து அடுத்த மாதம் 6–ந் தேதி அமலுக்கு வருவதாகவும், எஞ்சிய 16 பில்லியன் டாலர் வரி விதிப்பு நடைமுறைக்கு வருவது பற்றி பின்னர் தெரிவிக்கப்படும் என கூறியது நினைவுகூரத்தக்கது.

ஆக அமெரிக்காவுக்கு, அதன் பாணியிலேயே சீனா பதிலடி கொடுத்து உள்ளது.

அமெரிக்கா, சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரம் அடைந்தால், அது உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story