டீசல் கார்களில் தொழில்நுட்ப மோசடி: ‘ஆடி’ கார் நிறுவன தலைமை அதிகாரி கைது


டீசல் கார்களில் தொழில்நுட்ப மோசடி: ‘ஆடி’ கார் நிறுவன தலைமை அதிகாரி கைது
x
தினத்தந்தி 18 Jun 2018 10:45 PM GMT (Updated: 18 Jun 2018 10:06 PM GMT)

டீசல் கார்களில் தொழில்நுட்ப மோசடியில் ஈடுபட்ட‘ஆடி’ கார் நிறுவன தலைமை அதிகாரி ரூபர்ட் ஸ்டட்லர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிராங்க்பர்ட், 

ஜெர்மனியை சேர்ந்த பிரபல கார் நிறுவனம் போக்ஸ்வேகன். இந்த நிறுவனம் தயாரித்த டீசல் கார்களில், சுற்றுச்சூழலை பாதிக்கும் மாசு அதிக அளவில் வெளியானது. ஆனால், ஆய்வுக்கூட பரிசோதனையில் அது தெரியாத அளவுக்கு விசேஷ சாப்ட்வேர் மூலம் உருவாக்கப்பட்ட சாதனத்தை தனது டீசல் கார்களில் பொருத்தியதாக புகார் எழுந்தது. இதுபோன்று சுமார் 1 கோடியே 10 லட்சம் டீசல் கார்களில் மோசடி நடந்தது. அமெரிக்காவில் முதல் முறையாக இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. போக்ஸ்வேகன் கார்களில் மட்டுமின்றி, அதன் துணை நிறுவனமான ஆடி மற்றும் போர்ச், ஸ்கோடா, சீட் ஆகியவற்றின் டீசல் கார்களிலும் இந்த மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது.

இதுபற்றி போக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு எதிராக ஜெர்மனி நாட்டில் விசாரணை தொடங்கியது. கார்களை திரும்ப பெற்றது, அபராதம், இழப்பீடு என்ற வகையில், அந்நிறுவனம் இதுவரை ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் கோடி செலவளித்துள்ளது. அமெரிக்காவில் போக்ஸ்வேகன் நிறுவனத்தை சேர்ந்த 2 பேர், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஆடி கார் நிறுவன தலைமை செயல் அதிகாரி ரூபர்ட் ஸ்டட்லர் நேற்று ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார். மோசடி சாதனம் பொருத்தப்பட்ட டீசல் கார்களை ஐரோப்பா முழுவதும் விற்பனை செய்ய அனுமதிக்கும் ஆவணங்களை இவர்தான் போலியாக உருவாக்கியதாக தெரிய வந்துள்ளது. அவர் ஆதாரங்களை அழிக்க முயற்சிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் ரூபர்ட் ஸ்டட்லர் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், இப்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Next Story