தாய்லாந்தில் 9 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முதலாக கொலைக் கைதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்


தாய்லாந்தில் 9 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முதலாக கொலைக் கைதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
x
தினத்தந்தி 19 Jun 2018 11:00 PM GMT (Updated: 19 Jun 2018 7:12 PM GMT)

தாய்லாந்தில் 9 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முதலாக கொலைக் கைதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பாங்காக்,

தாய்லாந்து நாட்டில் கடைசியாக 2009-ம் ஆண்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் அங்கு யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் அங்கு 17 வயதான ஒரு சிறுவனை 2012-ம் ஆண்டில் கொலை செய்த வழக்கில், தீராசக் லாங்ஜி (26) என்ற வாலிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவருக்கு பாங் குவாங் மத்திய சிறையில் வைத்து நேற்று முன்தினம் விஷ ஊசி போட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அங்கு முதலில் துப்பாக்கியால் சுட்டுத்தான் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது வந்தது. 2003-ம் ஆண்டு முதல்தான் மரண தண்டனை கைதிகளுக்கு அமெரிக்காவை போன்று விஷ ஊசி போட்டு தண்டனையை நிறைவேற்றும் வழக்கம் வந்தது.

அந்த வகையில் விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 7-வது கைதி என்ற பெயரை தீராசக் லாங்ஜி பெற்றார்.

ஆனால் இதை மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் கடுமையாக சாடி உள்ளது. “வாழும் உரிமை மீதான மோசமான மீறல் இது. குற்றங்களை தடுக்க மரண தண்டனை ஒரு ஆயுதமாக பயன்படும் என்பது நிரூபிக்கப்படவில்லை. எனவே இனி யாருக்கேனும் மரண தண்டனை நிறைவேற்ற தாய்லாந்து அரசு எண்ணி இருந்தால் அதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று அந்த அமைப்பு கூறியது.

Next Story