‘சீன பொருட்கள் மீது மேலும் ரூ.13.60 லட்சம் கோடி வரி விதிப்போம்’: அமெரிக்கா மிரட்டல்; சந்திக்க தயார் என சீனா அறிவிப்பு


‘சீன பொருட்கள் மீது மேலும் ரூ.13.60 லட்சம் கோடி வரி விதிப்போம்’: அமெரிக்கா மிரட்டல்; சந்திக்க தயார் என சீனா அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Jun 2018 11:30 PM GMT (Updated: 19 Jun 2018 7:12 PM GMT)

சீன பொருட்கள் மீது மேலும் ரூ.13 லட்சத்து 60 ஆயிரம் கோடி மதிப்பிலான வரி விதிப்போம் என அமெரிக்கா மிரட்டி உள்ளது. இதை சந்திக்க தயார் என சீனா அறிவித்து உள்ளது.

வாஷிங்டன்,

உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் ஏற்பட்டு உள்ளது.

‘அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களை சீனா திருடுவதுடன், தொழில் நுட்பத்தையும் கடத்திக்கொண்டு போகிறது’ என்பது சீனா மீது அமெரிக்கா முன்வைக்கிற குற்றச்சாட்டு ஆகும்.

இதன் காரணமாக சீனா, அமெரிக்காவுக்கு வர்த்தக பற்றாக்குறையை உருவாக்கி உள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

இதன் காரணமாக சீனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகிறது என அவர் கருதுகிறார்.

அந்த அடிப்படையில் கடந்த வாரம், சீனாவில் இருந்து இறக்குமதி ஆகிற பொருட்களுக்கு அமெரிக்கா 50 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் கோடி) வரி விதித்து அறிவிப்பு வெளியிட்டது.

உடனடியாக சீனாவும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்களுக்கு அதே 50 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் கோடி) அளவுக்கு வரி விதித்து அறிவித்தது.

இது டிரம்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சீனாவை மிரட்டும் விதமாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:-

சீனா மீண்டும் வரிகளை அதிகரித்தால், அந்த நாட்டின் மீது மேலும் 200 பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.13 லட்சத்து 60 ஆயிரம் கோடி) வரி விதிப்போம்.

இதற்காக சீனாவில் இருந்து இறக்குமதி ஆகிற 10 சதவீத வரி விதிக்கத்தக்க பொருட்களை அடையாளம் கண்டறியுமாறு அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைத்திசருக்கு உத்தரவு போட்டு உள்ளேன்.

சீனா தனது நடைமுறைகளை மாற்றிக்கொள்ள மறுத்தால், சட்ட நடைமுறைகள் முடிந்த பின்னர் அந்த நாட்டின் மீதான 200 பில்லியன் டாலர் வரி விதிப்பு, அமலுக்கு வரும்.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தக உறவு, மிக மிக சம நிலையில் இருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அமெரிக்க பொருட்கள் மீது 50 பில்லியன் டாலர் அளவுக்கு வரியை நிர்ணயித்து உள்ளது. அமெரிக்க அறிவுசார் சொத்துக்களை, தொழில் நுட்பத்தை கையகப்படுத்துகிற நேர்மையற்ற வர்த்தக நடைமுறைகளை மாற்றிக்கொள்ளும் எண்ணம் சீனாவுக்கு இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

தங்கள் நடைமுறை மாற்றிக்கொள்வதை விட, எந்த தவறுமே செய்யாத அமெரிக்க கம்பெனிகளை, ஊழியர்களை, விவசாயிகளை சீனா மிரட்டுகிறது.

சீனாவின் சமீபத்திய நடவடிக்கை, அமெரிக்காவை நிரந்தரமாகவே நியாயமற்ற முறையில் வைத்திருப்பதற்கான உறுதியை தெளிவாக காட்டுகிறது. இது 376 பில்லியன் டாலர் (சுமார் ரூ.25 லட்சத்து 56 ஆயிரத்து 800 கோடி) வர்த்தக சமனற்ற நிலையை பிரதிபிலிப்பதாக அமைந்து உள்ளது.

சீனா தனது நடைமுறையை மாற்றிக்கொள்வதற்கும், அமெரிக்க பொருட்களுக்கு அதன் சந்தைகளை திறக்கவும், சமமான வர்த்தக உறவை ஏற்றுக்கொள்ளச்செய்வதற்கும் மேலும் நடவடிக்கை அவசியம் ஆகிறது.

இவ்வாறு அதில் டிரம்ப் கூறி உள்ளார்.

டிரம்பின் இந்த அச்சுறுத்தல், மிரட்டி பணிய வைக்கும் முயற்சி என சீனா கூறி உள்ளது.

டிரம்பின் அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கிற வகையில், சீன வர்த்தக அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், “பல்வேறு பேச்சுவார்த்தைகளின்போது இரு தரப்பிலும் ஏற்படுத்தப்பட்ட கருத்து ஒற்றுமையில் இருந்து விலகிச்செல்கிற வகையில், அமெரிக்கா மேலும் அழுத்தம் தருகிறது. மிரட்டி பணிய வைக்கிற யுத்தியையும் பின்பற்றுகிறது. இது சர்வதேச சமூகத்துக்கு ஏமாற்றத்தை அளித்து உள்ளது. அமெரிக்கா இழப்பை சந்தித்தால் அதை பட்டியலிடட்டும். சீனாவுக்கு பதில் நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை. எனவே அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என கூறப்பட்டு உள்ளது.

Next Story