வேலைக்கார பெண்ணுக்காக துபாயில் இருந்து அஞ்சலி செலுத்த இலங்கை வந்த குடும்பத்தினர்


வேலைக்கார பெண்ணுக்காக துபாயில் இருந்து அஞ்சலி செலுத்த இலங்கை வந்த குடும்பத்தினர்
x
தினத்தந்தி 22 Jun 2018 5:32 AM GMT (Updated: 22 Jun 2018 5:32 AM GMT)

வேலைக்கார பெண் மீது கொண்ட அன்பால் துபாயில் இருந்து அஞ்சலி செலுத்த இலங்கை வந்த குடும்பத்தினர் !! நெகிழ வைத்த சம்பவம்!!

இலங்கை கப்புவத்தை பகுதியைச் சேர்ந்த சாந்தி பெரேரா என்ற பெண் நான்கு குழந்தைகளை பராமரிக்கும் பணிக்காக கடந்த 1981 ஆம் ஆண்டு துபாய் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பின்னர் மேலும் நான்கு குழந்தைகள் என எட்டு குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பு சாந்திக்கு வழங்கப்பட்டது..

திருமணமே செய்து கொள்ளாத சாந்தி . தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நல்ல முறையில் நிறைவேற்றி வந்துள்ளார். 38 ஆண்டுகளாக சாந்தி, துபாயில் அந்த ஒரே வீட்டில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு சாந்திக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து துபாய் வீட்டின் உரிமையாளர்கள் அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்காமல் துபாயில் வைத்தே சிகிச்சையளித்து வந்தனர்.. சாந்தி சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் அவரது சகோதரர் துபாய் வந்து செல்ல பயண ஏற்பாடுகளையும் அவர்கள் இலவசமாகசெய்து கொடுத்துள்ளனர்.

ஆனாலும் சாந்தியின் உடல் நிலை சரியாகாததால் அவரது விருப்பப்படி ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற கடந்த 2012 ஆண்டு அந்த துபாய் குடும்பத்தினர் சாந்தியை இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் எவ்வளவோ சிகிச்சை அளித்தும் சாந்தி அண்மையில் மரணமடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த துபாய் குடும்பத்தைச் சேந்த 6 பேர் உடனடியாக இலங்கை வந்து சாந்தியின் இறுதிச் சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

துபாயில் இருந்து வந்தவர்கள் சாந்தியின் உடலைப் பார்த்து அம்மா, அம்மா என்று அழுதபடி அவரின் சவப்பெட்யை தோளில் சுமந்து சென்றதுடன் இஸ்லாமிய மக்களின் முறைப்படி சாந்தியை அடக்கம் செய்யும் இடத்தில் அமர்ந்து குர்ஆன் ஓதிய காட்சி அனைவரையும் மனம் நெகிழ வைத்தது.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சாந்தி இறக்கும் வரை ஆண்டு தோறும் அந்த குடும்பத்தினர் துபாயில் இருந்து வந்து சாந்தியை பார்த்து விட்டு சென்றுள்ளனர். சாந்தி மீது மிகுந்த பாசம் வைத்திருந்த அந்த குடும்பத்தினர் கல்லறையை விட்டு செல்ல மனமில்லாமல் நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தது அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

Next Story