உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 25 Jun 2018 11:15 PM GMT (Updated: 25 Jun 2018 8:43 PM GMT)

மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான ஊழல் வழக்கு விசாரணை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.


* பாகிஸ்தான் முதல் முறையாக முற்றிலும் உள்நாட்டிலேயே தயார் செய்யப்பட்ட ‘பாக்டெஸ்-1ஏ’ என்ற செயற்கைகோளை அடுத்த மாதம் விண்ணுக்கு அனுப்புகிறது. 285 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைகோள் புவியியல் ஆராய்சிக்கு உதவுவதோடு, பருவநிலை மற்றும் வானிலை நிலவரங்களையும் அறிந்துகொள்ள உதவும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

* ஏமன் நாட்டின் சாடா நகரில் இருந்து சவுதி அரேபியாவின் ரியாத் நகரை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 2 ஏவுகணைகளை வீசினர். ஆனால் சவுதி அரேபியாவின் வான்பாதுகாப்பு படை அந்த 2 ஏவுகணைகளையும் நாடுவானிலேயே வழிமறித்து அழித்துவிட்டது.

* தென் சீனக்கடல் விவகாரம் மற்றும் தைவானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வது தொடர்பாக அமெரிக்கா சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மாட்டிஸ் இன்று சீனா செல்கிறார். அங்கு அவர் சீன அரசின் மூத்த அதிகாரிகளை சந்தித்து இருநாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

* மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான ஊழல் வழக்கு விசாரணை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த வழக்கில் முதல்முறையாக நஜீப் ரசாக்கின் முன்னாள் உதவியாளரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

* அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு மேரிலாந்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட டேவிட் டிரோன் மற்றும் அருணா மில்லர் (வயது 53) என்ற இந்திய பெண் என்ஜினீயர் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. இதில் வேட்பாளரை தேர்வு செய்ய இன்று நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுபவர் எளிதாக நாடாளுமன்றத்தில் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. அப்படி அருணா மில்லருக்கு வாய்ப்பு கிடைத்தால் பிரதிநிதிகள் சபையில் நுழையும் 2-வது இந்திய பெண் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும்.

Next Story