மெக்சிகோவில் பட்டாசு சந்தையில் வெடி விபத்து; 24 பேர் சாவு


மெக்சிகோவில் பட்டாசு சந்தையில் வெடி விபத்து; 24 பேர் சாவு
x
தினத்தந்தி 6 July 2018 10:33 PM GMT (Updated: 6 July 2018 10:33 PM GMT)

மெக்சிகோவில் பட்டாசு சந்தையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோ சிட்டி, 

மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள டுல்டெபக் நகரில், மிகப்பெரிய பட்டாசு சந்தை உள்ளது. இங்கு ஏராளமான பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு, விற்பனை நடந்து வந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை பட்டாசு சந்தை வழக்கம் போல் மும்முரமாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அங்கிருந்த ஒரு பட்டாசு கடையில் பயங்கர வெடிவிபத்து நேரிட்டது.

இதனால் ஏற்பட்ட தீ, அருகில் இருந்த கடைகளுக்கும் வேகமாக பரவியதால் பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறின.

மக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் வெடி விபத்தில் சிக்கி ஒரு சிலர் உயிர் இழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

இதனையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். வெடிவிபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள் அங்கு தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, பட்டாசு சந்தையில் மீண்டும் வெடிவிபத்து நேரிட்டது. அடுத்தடுத்து 3 முறை வெடிவிபத்து ஏற்பட்டது.

இதனால் அந்த பகுதியே குலுங்கியது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அருகில் உள்ள 4 சிறிய கட்டிடங்கள் இடிந்து, தரைமட்டமாகின. பல வாகனங்களும் எரிந்து உருக்குலைந்து போயின.

இந்த கோர வெடிவிபத்தில் 4 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 2 போலீசார் உள்பட 24 பேர் உயிர் இழந்தனர். மேலும் 49 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைபெற்று வருகிறார்கள்.

Next Story