ஆட்சி கவிழ்ப்பு முயற்சி விவகாரம்: துருக்கியில் 18 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்


ஆட்சி கவிழ்ப்பு முயற்சி விவகாரம்: துருக்கியில் 18 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்
x
தினத்தந்தி 9 July 2018 12:00 AM GMT (Updated: 8 July 2018 11:34 PM GMT)

துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி விவகாரத்தில் 18 ஆயிரம் அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் நேற்று பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

அங்காரா, 

துருக்கியில் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந் தேதி, அதிபர் தாயீப் எர்டோகனை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றும் நோக்கத்தில் ராணுவ புரட்சிக்கு முயற்சி நடந்தது.

ராணுவத்தின் ஒரு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியை மக்கள் ஆதரவுடன் அதிபர் எர்டோகன் முறியடித்தார். அத்துடன், இந்த முயற்சியில் இறங்கிய குற்றச்சாட்டின் பேரில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேரை சிறையில் அடைத்தார். அந்த சமயத்தில் அங்கு நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு, இப்போது வரை அமலில் உள்ளது.

அங்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் அதிபர் எர்டோகன் வெற்றி பெற்று பதவியை தக்க வைத்தார். தேர்தல் வெற்றிக்கு பின்னர் இன்று (திங்கட்கிழமை) அவர் பதவி ஏற்கிறார். அவருக்கு முன்பு இருந்ததை விட கூடுதல் நிர்வாக அதிகாரங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்த மாதம் அவர் நெருக்கடி நிலையை விலக்கிக்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு அங்கு நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஆட்சி கவிழ்ப்பு முயற்சி விவகாரத்தில் 18 ஆயிரம் அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் நேற்று பணியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் போலீஸ் படையை சேர்ந்தவர்கள். 199 பேர் பல்கலைக்கழக கல்விப்பணியாளர்கள் ஆவர். துருக்கியில் ஏற்கனவே இந்த விவகாரத்தில் 1 லட்சத்து 60 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Next Story