குகையிலிருந்து 9 பேரை மீட்கும் நடவடிக்கை, விரைவில் நல்லசெய்தி -மீட்புக்குழு


குகையிலிருந்து 9 பேரை மீட்கும் நடவடிக்கை, விரைவில் நல்லசெய்தி -மீட்புக்குழு
x
தினத்தந்தி 9 July 2018 10:12 AM GMT (Updated: 9 July 2018 10:12 AM GMT)

தாய்லாந்து குகையிலிருந்து இன்னும் 9 பேரை வெளியே கொண்டுவர வேண்டியுள்ளது. #ThailandCaveRescue

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையில் சிக்கிய 12 சிறார்கள் மற்றும் அவர்களுடைய கால்பந்து பயிற்சியாளரை காப்பாற்றும் பணியில் மீட்பு குழு தீவிரமாக இறங்கியுள்ளது. நீர்மூழ்கி வீரர்கள் உதவியுடன் மீட்கப்பட்டு வருகிறார்கள். 
 
மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், சிறுவர்களையும், பயிற்சியாளரையும் மீட்க தீவிரமாக திட்டம் வகுக்கப்பட்டது. சிறுவர்கள், பயிற்சியாளர் என 13 பேரும் நல்ல மன வலிமையுடனும், உடல் வலிமையுடனும் காணப்பட்டதால் அவர்களை மீட்க அதிரடியாய் திட்டமிட்டு, டி-டே என்ற ஆபரேஷன் தொடங்கப்பட்டது. சிறுவர்களையும், பயிற்சியாளரையும் மீட்பதற்காக நீர்மூழ்கி வீரர்கள் நேற்று குகைக்குள் சென்றனர். 
அதிரடியான மீட்பு பணி தொடங்கிய நிலையில் 4 சிறார்கள் மீட்கப்பட்டார்கள். மீட்கப்பட்ட சிறார்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதற்கிடையே 10 மணிநேரங்கள் கழித்து அடுத்த ஆபரேஷன் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. 50 வெளிநாட்டவர்கள் உள்பட 90 நீர்மூழ்கி வீரர்கள் மீட்பு பணியில் இறங்கியுள்ளார்கள். 8 சிறுவர்கள், பயிற்சியாளரை உள்ளிருந்து வெளியே கொண்டுவர வேண்டியதுள்ளது. இன்று அவர்களை மீட்பதற்கான அடுத்தக்கட்ட பணியை மீட்பு குழு தொடங்கியுள்ளது. நேற்று பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கி வீரர்களைவிட அதிகமான வீரர்கள் இன்று களமிறக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுகிறது. குகையிலிருந்து 9 பேரை மீட்கும் பணியில் இறங்கியுள்ள சர்வதேச குழு, விரைவில் நற்செய்தி வரும் என்று தெரிவித்துள்ளது.
 
மீட்பு குழுவின் தலைவர் நரோங்சக் பேசுகையில், “அனைத்து உபகரணங்களும் தயாராக உள்ளது. ஆக்ஸிஜன் பாட்டில்களும் தயாராக உள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் நமக்கு நல்ல செய்தி கிடைக்கும்,” என கூறியுள்ளார். 

Next Story