உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 9 July 2018 9:15 PM GMT (Updated: 9 July 2018 7:50 PM GMT)

உலகைச் சுற்றி...

உலகைச் சுற்றி...

* ஈரானை சேர்ந்த மதே ஹோஜப்ரி என்ற பெண் தான் நடனமாடிய வீடியோ பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார். இது பெரும் சர்ச்சைக்கு உள்ளானதை தொடர்ந்து, மதே ஹோஜப்ரிக்கு ஆதரவாக ஏராளமான ஈரான் நாட்டு பெண்கள் ‘நடனமாடுவது குற்றம் அல்ல’ என்கிற ஹேஷ்டாக்குடன் மதே ஹோஜப்ரி நடனமாடும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

* ஜப்பானில் வரலாறு காணாத அளவுக்கு, தொடர்ந்து பெய்து வரும் பேய் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டியது. ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

* துனிசியாவின் மேற்கு பகுதியில் அல்ஜீரியா நாட்டின் எல்லையையொட்டி உள்ள ஜென்டோயுபா என்கிற நகரில் பாதுகாப்புபடை வீரர்கள் சென்றுகொண்டிருந்த கார் மீது பயங்கரவாதிகள் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்புபடை வீரர்கள் 9 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.

* ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவின் மகன் டுடுசானே ஜூமா நேற்று ஜோகன்னஸ்பர்க் நகர குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் ஒரு லட்சம் ராண்ட் (சுமார் ரூ.5 லட்சம்) பிணைத் தொகை செலுத்தியதை தொடர்ந்து அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கி விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

* ரோஹிங்யா அகதிகள் விவகாரம் தொடர்பாக மியான்மர் அரசின் ரகசியங்களை வெளியிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் வா லோனே, கியாவ் சோய் டோ ஆகியோர் மீது யாங்கூன் நகர கோர்ட்டு நேற்று வழக்கு பதிவு செய்தது. இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.

Next Story