300 முதலைகளை வெட்டிசாய்த்து பழிதீர்த்த கும்பல்


300 முதலைகளை வெட்டிசாய்த்து பழிதீர்த்த கும்பல்
x
தினத்தந்தி 16 July 2018 9:35 AM GMT (Updated: 16 July 2018 9:35 AM GMT)

பழிக்குபழி வாங்குவதற்காக ஒரே பண்ணையை சேர்ந்த 300 முதலைகள் வெட்டி சாய்க்கப்பட்டன. #Indonesia

ஜகார்தா,

இந்தோனேஷிய கிராமவாசிகளால் கத்தி மற்றும் கோடரிகள் மூலம் ஒரே பண்ணையை சேர்ந்த சுமார் 300 முதலைகள் கொல்லப்பட்டன. தங்கள் உறவினரை கடித்து கொன்றதற்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கிழக்கு இந்தோனேசியாவின் மேற்கு பப்புவாவின் சோரொங் மாவட்டத்தில், ஒரு பெரிய குவியலாக இறந்த முதலைகளின் புகைப்படங்களை தனியார் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டது. இது குறித்து இந்தோனேஷியாவின் இயற்கை வள பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘48 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தனது வீட்டு விலங்குகளின் தேவைக்காக புல் சேகரிக்க அந்த பண்ணைக்குள் சென்ற போது அங்கிருந்த ஒரு முதலை தாக்கியதில் அவர் உயிரிழந்தார்’ என்று கூறினார்.

ஏற்கனவே அந்த முதலைப் பண்ணையை அகற்ற அப்பகுதி கிராமமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், முதலை ஒருவரை கொன்றது அவர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. பின்னர் அவரின் உடலை கொண்டு சென்று இறுதிச்சடங்குகளை முடித்த கிராமத்தினர், பின்னர் பழிக்குப்பழி வாங்குவதற்காக நேராக அந்த முதலை பண்ணைக்கு சென்றனர். அங்கிருந்த முதலைகளை தாறுமாறாக வெட்டி சாய்த்தனர். இதில் சுமார் 300 முதலைகள் கொல்லப்பட்டன.

ஆனால் இதனை முதலை பண்ணை உரிமையாளர் மறுத்துள்ளார். யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பண்ணை பாதுகாக்கப்பட்டு வந்ததாகவும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story