லண்டனில், சொகுசு வீடுகள் வாங்கிய வழக்கில் 11 ஆண்டு சிறை: தீர்ப்பை எதிர்த்து நவாஸ் ஷெரீப் ஐகோர்ட்டில் மேல்முறையீடு


லண்டனில், சொகுசு வீடுகள் வாங்கிய வழக்கில் 11 ஆண்டு சிறை: தீர்ப்பை எதிர்த்து நவாஸ் ஷெரீப் ஐகோர்ட்டில் மேல்முறையீடு
x
தினத்தந்தி 16 July 2018 11:30 PM GMT (Updated: 16 July 2018 9:33 PM GMT)

லண்டனில் சொகுசு வீடுகள் வாங்கிய வழக்கில் 11 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இஸ்லாமாபாத், 

பிரதமராக பதவி வகித்தபோது நவாஸ் ஷெரீப் தனது குடும்பத்தினர் பெயரில் லண்டனில் அவென்பீல்டு சொகுசு வீடுகளை ஊழல் செய்த பணத்தில் வாங்கியதாக இஸ்லாமாபாத் பொறுப்புடைமை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் மகள் மரியத்துக்கும், மருமகன் கேப்டன் சப்தாருக்கும் பெரும் பங்கு உண்டு என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்து வந்த இஸ்லாமாபாத் பொறுப்புடைமை கோர்ட்டு, கடந்த 6-ந் தேதி நவாஸ் ஷெரீப்புக்கு மொத்தம் 11 ஆண்டு சிறைத் தண்டனையும் 10 மில்லியன் டாலர்(ரூ.65 கோடி) அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது. மகள் மரியத்துக்கு 8 வருட சிறைத்தண்டனையும், 2.6 மில்லியன் அபராதமும்(ரூ.17 கோடி) விதித்தது. சப்தாருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை மட்டும் விதிக்கப்பட்டது. அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பியபோது நவாஸ் ஷெரீப்பும்(வயது 68), அவருடைய மகள் மரியமும்(44) லாகூர் நகரில் கைது செய்யப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள அடியலா சிறையில் அடைக்கப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்த சப்தார் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இதே சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது பொறுப்புடைமை கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மூவரும் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர். இதுபற்றி நவாஸ் ஷெரீப்பின் வக்கீல்கள் கூறுகையில், “அவென்பீல்டு சொகுசு வீடுகள் வழக்கில் ஏராளமான சட்ட குளறுபடிகள் உள்ளன. இதை கோர்ட்டு கவனத்தில் கொள்ளவில்லை. எனவே இந்த தீர்ப்பை ரத்து செய்யவேண்டும். மேலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப், மரியம், சப்தார் ஆகிய மூவரையும் ஜாமீனில் விடுதலை செய்யவேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டு உள்ளது” என்றனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், ‘தற்போது அடியலா சிறை வளாகத்தில் நவாஸ் ஷெரீப் மீதான 2 ஊழல் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இதை வேறு பொறுப்புடைமை கோர்ட்டுக்கு மாற்றவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாக’ தெரிவித்தனர்.

நவாஸ் ஷெரீப், அவருடைய மகன்கள் ஹூசைன் மற்றும் ஹசன் ஆகியோர் மீதும் 3 ஊழல் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வருகிற 25-ந் தேதி நடைபெறும் தேர்தலையொட்டி நவாஸ் ஷெரீப் தனது கட்சி(பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ்) வேட்பாளர்களுக்காக சிறையில் இருந்தவாறு வாக்கு கேட்கும் 2 நிமிட ஆடியோ பதிவு ஒன்று நேற்று வெளியிடப்பட்டது.

அதில், “பாகிஸ்தானின் அழுக்கு அரசியல் ஒட்டுமொத்த தேசத்தையும் சிறையில் அடைக்க காத்திருக்கிறது. இந்த விளையாட்டை மக்கள் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். எங்களை சிறையில் அடைப்பதன் மூலம் மக்களுக்கும், எனக்கும் உள்ள உறவை உடைக்க முடியாது. உங்களுடைய வாக்குகளை நம்மை அவமதித்தவர்கள் மீண்டும் தலைதூக்க முடியாதபடி தோற்கடியுங்கள்” என்று நவாஸ் ஷெரீப் கேட்டுக் கொண்டு உள்ளார்.

ஆனால் இந்த ஆடியோ, எங்கு, எப்போது பதிவு செய்யப்பட்டது என்கிற தகவல் வெளியாகவில்லை.

Next Story