ரஷ்யாவின் உளவுத்துறையை ஆதரிக்கும் டிரம்பின் செயலுக்கு அமெரிக்காவில் கண்டனங்கள்


ரஷ்யாவின் உளவுத்துறையை  ஆதரிக்கும் டிரம்பின் செயலுக்கு  அமெரிக்காவில் கண்டனங்கள்
x
தினத்தந்தி 17 July 2018 4:52 AM GMT (Updated: 17 July 2018 4:52 AM GMT)

அமெரிக்க தேர்தலில் ரஷ்யத் தலையீடு விவகாரத்தில் ரஷ்யாவின் உளவுத்துறையை ஆதரிக்கும் டிரம்பின் செயலுக்கு அமெரிக்காவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

வாஷிங்டன்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேச விரும்புவதாக கடந்த மார்ச் மாதம் ரஷிய அதிபர் புதின் விருப்பம் தெரிவித்து இருந்தார். இதை டிரம்பும் ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒருவார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிரம்புடன், புதின் பின்லாந்தில் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து இருவரும் பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் நேற்று சந்தித்தனர். இரு தலைவர்களும் முதன் முதலாக தனிப்பட்ட முறையில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டது வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

மாஸ்கோ நகரில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நீண்ட நெடிய பயணமாக புதின் நேற்று காலை தனி விமானம் மூலம் ஹெல்சிங்கி நகர் சென்றடைந்தார்.

இதைத் தொடர்ந்து டிரம்பும், புதினும் பின்லாந்து அதிபர் மாளிகையில் சந்தித்தனர். அப்போது ஒருவரையொருவர் கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். மேலும், உலககோப்பை கால்பந்து போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக புதினை டிரம்ப் பாராட்டினார். இரு பெரும் வல்லரசு நாடுகளின் தலைவர்களின் இந்த சந்திப்பை உலக நாடுகள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தன. தலைவர்களின் இந்த சந்திப்பு 2 அமர்வுகளாக பல மணி நேரம் நீடித்தது.

இந்த சந்திப்புக்குப் பிறகு நடந்த நிருபர்கள் கூட்டத்தில், அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு இருந்தது என்று கூறும் தமது சொந்தப் புலனாய்வு அமைப்பை நம்புகிறாரா அல்லது ரஷ்ய அதிபரை நம்புகிறாரா என்று டிரம்பிடம் கேட்கப்பட்டது.

"ரஷ்யா தலையிடவில்லை என்கிறார் அதிபர் புதின். அவர்  தலையிடுவதற்கான காரணம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை," என்று பதில் அளித்தார் டிரம்ப்.

தங்கள் சொந்தப் புலனாய்வு அமைப்பை மறுத்து, ரஷ்யாவை ஆதரிக்கும் டிரம்பின் செயலுக்கு உடனடியாக அமெரிக்காவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

 அமெரிக்க நாடாளுமன்ற (காங்கிரஸ்) மக்கள் பிரதிநிதிகள் அவைத் தலைவர் பவுல் ரய்யான் ரஷ்யா நமது கூட்டாளி நாடல்ல என்பதை டிரம்ப் உணரவேண்டும்," என்று கூறியுள்ளார்.

டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மூத்த செனட்டர் ஜான் மெக்கைன் அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவரின் "வெட்கக்கேடான செயல்பாடு" இது என்று  கூறியுள்ளார்.

Next Story