புதின் சந்திப்பை தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய டிரம்புக்கு சொந்தக்கட்சியிலேயே எதிர்ப்பு

ரஷிய அதிபர் புதினுடனான சந்திப்பைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு, சொந்தக்கட்சியிலேயே எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்க நாட்டில் 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடையவும், அவரை எதிர்த்து போட்டி போட்ட குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றி பெறவும் ரஷியா துணை நின்றதாக குற்றச்சாட்டு உள்ளது
குறிப்பாக, அந்த தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாகவும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராகவும் தேர்தலை நகர்த்தும் வகையில், ரஷிய அரசின் உதவியோடு, அமெரிக்காவில் இணையவழி தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், சமூக ஊடகங்களில் பொய்ச்செய்திகளை வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இதுபற்றி அமெரிக்காவில் சிறப்பு விசாரணை அதிகாரியான ராபர்ட் முல்லர் விசாரணை நடத்துகிறார். சமீபத்தில் ரஷிய உளவு அதிகாரிகள் 12 பேர் மீது ராபர்ட் முல்லர் குழு குற்றச்சாட்டு பதிவு செய்தது.
ஆனால் அமெரிக்க தேர்தலில் ரஷியா தலையிட வில்லை என்று அந்த நாட்டின் அதிபர் புதின் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இந்த நிலையில், பின்லாந்து நாட்டின் தலைநகரான ஹெல்சிங்கியில் நேற்று முன்தினம் நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் சந்தித்துப் பேசினார்கள். சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.
இந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது டிரம்பிடம் நிருபர்கள், “ அமெரிக்க தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்தது என்பது அமெரிக்க உளவு அமைப்புகளின் குற்றச்சாட்டு. இந்த விவகாரத்தில் நீங்கள் அமெரிக்க உளவு அமைப்புகளை நம்புகிறீர்களா அல்லது புதினை நம்புகிறீர்களா?” என கேள்வி எழுப்பினர்.
அதற்கு டிரம்ப் தயக்கமின்றி, “அமெரிக்க தேர்தலில் ரஷியா தலையிடவில்லை என்று அதிபர் புதின் கூறுகிறார். அவர்கள் தலையிடுவதற்கான காரணம் எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை” என பதில் அளித்தார்.
ஆனால் இந்தப் பதில், சர்ச்சையை ஏற்படுத்தியதோடு அமெரிக்காவில் டிரம்புக்கு அவரது சொந்தக்கட்சியான குடியரசு கட்சியிலேயே பலத்த எதிர்ப்பை சம்பாதித்து தந்து உள்ளது.
இதுபற்றி அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பால் ரேயான் கருத்து தெரிவிக்கையில், “ ரஷியா நமது கூட்டாளி இல்லை என்பதை டிரம்ப் பார்க்க வேண்டும். அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் தார்மீகம் சார்ந்த சமநிலை இல்லை. நமது அடிப்படை அம்சங்களுக்கும், கொள்கைகளுக்கும் ரஷியா எதிராகவே இருக்கிறது. 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததா என்ற சந்தேகத்துக்கே இடம் இல்லை” என கூறினார்.
குடியரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜான் மெக்கைன் எம்.பி., “அமெரிக்க ஜனாதிபதியின் வெட்கக்கேடான செயல்பாடு இது. இதற்கு முன்பு எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதியும், ஒரு கொடுங்கோலன் (ரஷியா) முன் இவ்வளவு மோசமாக இழிவாக நடந்து கொண்டது இல்லை” என்று கூறி உள்ளார்.
குடியரசு கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் லின்ட்சே கிரஹாம் எம்.பி., “2016-ம் ஆண்டு தேர்தலில் ரஷியா தலையிட்டதை பொறுப்பேற்க வைக்க வேண்டிய வாய்ப்பை டிரம்ப் இழந்து விட்டார்” என சாடினார்.
ஜனநாயகக்கட்சி தலைவர் சக் ஸ்குமர் கருத்து தெரிவிக்கையில், “டிரம்பின் செயல்பாடுகள் நமது எதிரியை பலமாக்கி, நம்மையும், நமது கூட்டாளிகளையும் பலவீனப்படுத்தி விட்டன” என்று கூறினார்.
அமெரிக்க உளவு அமைப்பு சி.ஐ.ஏ.யின் முன்னாள் இயக்குனர் ஜான் பிரன்னன், “டிரம்ப் நிருபர்களை சந்தித்து பேசியது, தேசத்துரோகத்துக்கு கொஞ்சமும் குறைவு இல்லாதது” என தாக்கினார்.
மேலும், “புதினின் சட்டைப் பைக்குள் டிரம்ப் இருக்கிறார். குடியரசு கட்சி தேசபக்தர்களே, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?” என்றும் சாடி உள்ளார்.
இதற்கு இடையே புதின் ஒரு பேட்டியில், அமெரிக்க தேர்தலில் ரஷியா தலையிட்டது என்று கூறுவது கேலிக்கூத்தானது என்று கூறினார்.
இப்படி எதிர்ப்பு வலுத்த நிலையில், டிரம்ப் பல்டி அடித்து விட்டார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ நமது உளவுப்படையினர் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து உள்ளேன்” என்று கூறி உள்ளார்.
Related Tags :
Next Story






