கோடிக்கணக்கில் சம்பளம்... ஆனாலும் போதவில்லை!


கோடிக்கணக்கில் சம்பளம்... ஆனாலும் போதவில்லை!
x
தினத்தந்தி 21 July 2018 11:01 AM GMT (Updated: 21 July 2018 11:01 AM GMT)

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் ஒரு குடும்பம் ரூ. 80 லட்சம் சம்பளம் பெற்றாலும், அரசு விவரத்தின்படி அது குறைந்த வருமானமாக கருதப்படுகிறது.

ஆறு இலக்க சம்பளம் பெறும் ஊழியர்களும் ஏழைகளாகக் கருதப்படுவது, உங்களைப் போல பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

ஆனால் சான் பிரான்சிஸ்கோ நகர வீட்டு வாடகை செலவை கணக்கிட்டுப் பார்க்கும்போது, இது உண்மைதான் என்று அமெரிக்காவின் வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

சான் பிரான்சிஸ்கோ, அதன் அருகில் உள்ள சான் மேட்டியோ மற்றும் மரின் கண்ட்ரிசில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் ரூ. 80.41 லட்சம் சம்பளம் பெற்றால் குறைந்த வருமானமாகக் கருதப்படுகிறது.

ரூ. 50.20 லட்சம் சம்பளம் பெற்றால், ‘மிகக்குறைந்த வருமானமாக’க் கருதப்படுகிறது. அமெரிக் காவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, இங்கே வருமான வரையறை மிகவும் வித்தியாசமாக உள்ளது.

அமெரிக்காவில் வருவாயும் வேலையும் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு எவ்வாறு வேறுபடுகின்றன என்பது பற்றிய தகவல்கள் புரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷன் என்ற நிறுவனம் நடத்திய ஹாமில்டன் புராஜெக்டில் ஆராயப்பட்டது.

சான் பிரான்சிஸ்கோவில் குறைந்த வருமான மாகக் கருதப்படும் ரூ. 80.41 லட்சத்தை விடக் குறைந்த வருமானத்தையே அமெரிக்காவின் மூன்றில் இரண்டு குடும்பங்கள் ஈட்டுகின்றன. அமெரிக்கா முழுவதிலும் நான்கு நபர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம் ரூ. 62.33 லட்சம் ஆகும்.

32 கோடி மக்கள்தொகை கொண்ட அமெரிக்காவில், 4 கோடிப் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். அங்கு ரூ. 17.19 லட்சம் வருமானம் பெறுபவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களாகப் பார்க்கப் படுகின்றனர்.

வேலை மற்றும் சம்பளத்தைப் பார்த்தால், அமெரிக்காவில் சில இடங்களில் அதிகமாகவும் நாட்டின் மற்ற இடங்களில் குறைவாகவும் உள்ளது.

தொழில்நுட்பத் துறையின் மையமாக இருக்கும் சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்காவுக்கு பொருளாதார ஏற்றத்தை அளித்துவருகிறது. நாட்டில் அதிக சம்பளம் பெறும் ஊழியர்கள் வாழும் பகுதியாக சான் பிரான்சிஸ்கோ உள்ளது.

கடந்த 2008 முதல் 2016 வரை சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் வாழும் 25 முதல் 64 வயதுடைய ஊழியர்களின் வருமானம் 26 சதவீதம் உயர்ந்துள்ளது. இது அமெரிக்காவின் மற்ற பெருநகரங்களை விட மிக அதிகம். 2016-ல் ஊழியர் களின் சராசரி வருமானம் ரூ. 43.15 லட்சமாக உயர்ந்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோ போல அமெரிக்காவின் பிற பகுதிகளிலும் அதிக ஊதியம் பெறும் ஊழியர்கள் வாழ்கின்றனர்.

25 முதல் 64 வயதுடைய முழுநேர ஊழியர்கள், சான் ஜோஸ் நகரத்தில் ரூ. 44.52 லட்சமும், வாஷிங்டனில் ரூ. 41.50 லட்சமும், பாஸ்டனில் ரூ. 38.15 லட்சமும் சராசரி வருமானமாகப் பெறுகின்றனர். இப்பகுதிகளில் அதிக வருமானம் தரும் பல வேலைகள் உள்ளன.

சான் பிரான்சிஸ்கோவில் மருத்துவர்களே அதிக சம்பளத்தை பெறுகின்றனர். இங்கு மருத்துவர்கள் பெரும்பாலும் ரூ. 1.32 கோடி வருமானம் ஈட்டுகின்றனர். மென்பொருள் பொறியாளர்கள் ரூ. 80.20 லட்சம் வருமானத் தையும், தலைமை நிர்வாகிகள் ரூ. 1.14 கோடி வருமானத்தையும் பெறுகின்றனர். ஆனால், இங்கும் பலர் மிகக் குறைந்த வருமானத்தைப் பெறுகின்றனர்.

சான் பிரான்சிஸ்கோவில் பண்ணைத் தொழிலாளர்களே மிகக் குறைந்த வருமானத்தைப் பெறுகின்றனர். இவர்கள் ரூ. 12.67 லட்சம் வருமானம் பெறுகின்றனர். குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் ரூ. 15.27 லட்சத்தை வருமானமாகப் பெறுகின்றனர்.

சான் பிரான்சிஸ்கோவுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவின் மற்ற பெரிய நகரங்களில் ஊதியம் குறைவாக உள்ளது.

டெட்ராய்ட் நகரில் ஒரு மருத்துவர் பொதுவாக ரூ. 98.83 லட்சம் சம்பாதிக்கிறார். குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் ரூ. 10.27 லட்சத்தை வருமானமாகப் பெறுகின்றனர்.

ஊழியர்களின் வருமானத்தில், வீட்டு வாடகை உள்ளிட்டவை முக்கியச் செலவுகளாக உள்ளன.

அமெரிக்காவின் மற்ற பகுதிகளைவிட, சான் பிரான்சிஸ்கோவில் வாழ்க்கைச் செலவு 25 சதவீதம் அதிகமாக உள்ளது.

இருந்தாலும், மற்ற பகுதிகளைச் சேர்ந்த ஊழியர்களைவிட சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஊழியர்கள் 45 சதவீதம் அதிக சம்பளம் பெறுவதால், இவர்களே முன்னணியில் உள்ளனர்.

சான் பிரான்சிஸ்கோவில் அதிகமான சம்பளமும் குறைந்த வருமானமாக கருதப்படுவதற்குக் காரணம், அதிக வீட்டு வாடகைதான்.

சாதாரணமாக சான் பிரான்சிஸ்கோவில் இரண்டு அறை கொண்ட வீட்டின் மாத வாடகை ரூ. 2.13 லட்சம் ஆகும். அங்கு கடந்த 2008-ல் மாத வாடகை சுமார் ஒரு லட்ச ரூபாயாக இருந்த நிலையில், தற்போது இரு மடங்கு உயர்ந்துள்ளது. சின்சினாட்டி, ஓஹியோ பகுதிகளில் வீட்டு வாடகை ரூ. 57 ஆயிரம் மட்டும்தான்.

ஆனால், நல்ல வாழ்க்கைத் தரத்துக்காக பலர் அதிக பணத்தைச் செலவிட முன்வருவதைக் கருத்தில்கொள்ள வேண்டும்.

சான் பிரான்சிஸ்கோ நகரானது வாழ்வதற்கு விலையுயர்ந்த இடமாக இருந்தாலும், நல்ல வானிலை மற்றும் வளமான கலாசார வாழ்க்கை போன்றவை மக்களை வசீகரிக்கின்றன. 

Next Story