

உகண்டா,
பிரதமர் நரேந்திர மோடி ருவாண்டா, உகாண்டா, தென்ஆப்பிரிக்கா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 5 நாட்கள் சுற்றுப்பயணத்தின் முதல் பயணமாக ருவாண்டா நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றார்.
கடந்த 20 ஆண்டுகளில் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ருவாண்டாவுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். அவருக்கு அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், உகாண்டா சென்றுள்ள பிரதமர் மோடி, கம்பாலா நகரில் உள்ள இந்தியா-உகாண்டா தொழிலதிபர்கள் கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
இந்திய பொருளாதார வளர்சியை உலகம் பாராட்டுகிறது. இளைஞர்கள், இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கின்றனர். இந்தியாவுடனான வர்த்தகத்தில் சமநிலையற்ற தன்மை உள்ளதாக உகாண்டா அதிபர் தெரிவித்தார்.
இதனை சரிசெய்யவே வருகை தந்துள்ளேன். கொள்கைகளால் நிர்வாகம் செய்யப்படும் நாடு இந்தியா. அங்கு நிலவரித்தன்மையும், கணிக்கக்கூடிய வரி விதிப்பில் உள்ளது. இதனால் இந்தியாவில் அனைவரும் முதலீடு செய்வது எளிது என கூறினார்.
அதனைதொடர்ந்து உகாண்டா பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
உகாண்டாவிற்கு என்னை அழைத்தது இந்திய மக்களுக்கு கிடைத்துள்ள கவுரவம். உகண்டா நாடு ஆப்ரிக்காவின் முத்து. இது பெரும் வளங்கள் மற்றும் செல்வங்கள் நிறைந்த நிலம். பண்டைய காலத்தில் இருந்தே இந்தியாவும் உகண்டாவும் நட்புறவுடன் திகழ்கிறது.
இந்திய அரசால் ஜின் ஜாவின் நைல் நைல் நதியில் மகாத்மா காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் காந்தி பாரம்பரிய மையமும் செயல்படுத்தப்படும். ஆப்ரிக்காவை பங்குதாரராக வைத்துக்கொண்டதற்கு இந்தியா பெருமிதம் கொள்கிறது. ஆப்ரிக்காவில் இந்திய நிறுவனங்கள் 54 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன. ஆப்ரிக்காவின் இறக்குமதி இந்தியாவில் அதிகரித்துள்ளது.
ஆப்ரிக்காவுடன் 10 கொள்கைகளில் இந்தியா வழி நடக்கும். அவை எங்கள் முன்னுரிமைகளில் ஆப்ரிக்காவிற்கு முதன்மையானதாக இருக்கும். ஆப்பிரிக்காவுடனான எங்களது உறவை மேலும் வலுப்படுத்தி , ஆழமாக்குவோம். ஆப்ரிக்கா இந்தியாவில் முதலீடு செய்ய நாங்கள் ஆதரவு தருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.