லாவோஸ் நாட்டில் அணை உடைந்தது: வெள்ளத்தில் சிக்கி 20 பேர் சாவு


லாவோஸ் நாட்டில் அணை உடைந்தது: வெள்ளத்தில் சிக்கி 20 பேர் சாவு
x
தினத்தந்தி 25 July 2018 10:15 PM GMT (Updated: 25 July 2018 7:23 PM GMT)

தெற்கு ஆசிய நாடுகளில் மிகவும் ஏழ்மையான நாடு லாவோஸ். அங்கு தென்கிழக்கு பகுதியில் உள்ள அட்டபியு மாகாணத்தில் நீர் மின் சக்தி திட்டத்தின் கீழ் ‘சாடில் டி’ என்கிற பெயரில் பிரமாண்ட அணை கட்டப்பட்டு வந்தது.

வியன்டியன்,

‘சாடில் டி’  அணை கட்டும் பணி 90 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில் கடந்த செவ்வாய்கிழமை இரவு இந்த அணை திடீரென உடைந்தது.

இதனால் அணையை சுற்றி உள்ள கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது. சுமார் 7 கிராமங்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கின. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர். வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20 பேர் உயிர் இழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சுமார் 100 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை.

3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் மீட்பு பணிகளுக்காக காத்திருக்கிறார்கள். உணவு, உடை, குடிநீர் மற்றும் மருந்துபொருட்கள் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்கப்பெறாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். எனினும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் முழுவீச்சில் மீட்புபணிகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே அணை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த லாவோஸ், தென்கொரியா மற்றும் தாய்லாந்தை சேர்ந்த நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணை உடைந்ததாக தெரிவித்துள்ளன.

மேலும், அணையில் லேசான விரிசல் ஏற்பட்டபோதே அணையை சுற்றி இருக்கும் 12 கிராமங்களை சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேற்றும் படி எச்சரிக்கை விடுத்ததாகவும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Next Story