உலகைச் சுற்றி...

மியான்மரில் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகைச் சுற்றி...
Published on

* பத்திரிகையாளர்களை தொடர்ந்து மக்கள் விரோதிகளாக சித்தரிக்கும் போக்கை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிறுத்திக்கொள்ள வேண்டும் என நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் பதிப்பாளர் சுல்ஸ்பெர்கர் வலியுறுத்தி இருக்கிறார். டிரம்பின் இந்த போக்கு ஊடகங்களுக்கு எதிரான வன்முறைக்கு வழிவகை செய்துவிடும் எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

* மலேசியாவில் இருந்து சீனாவுக்கு 239 பயணிகளுடன் கடந்த 2014 மார்ச் 8-ந் தேதி சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது. அது தொடர்பான விசாரணை அறிக்கை நேற்று வெளியானது. விமானம் மாயமானதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

* கம்போடியா நாட்டில் நடந்த பொது தேர்தலில் அங்கு நீண்டகாலமாக பிரதமராக இருந்து வரும் ஹூன் சென் தலைமையிலான ஆளும், காம்போடியா மக்கள் கட்சி வெற்றிபெற்றதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. ஆனால் முக்கிய எதிர்க்கட்சியான காம்போடியா தேசிய மீட்பு கட்சி, தேர்தல் முடிவுகளை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

* இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் கடும் பாதிப்புக்குள்ளான லம்பாக் தீவில் உள்ள ரிஜானி என்கிற மலையில், மலையேறும் வீரர்கள் 560 பேர் சிக்கி உள்ளனர். ஹெலிகாப்டர்களின் உதவியோடு அவர்களை மீட்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

* பாலஸ்தீனத்தை சேர்ந்த 17 வயது சிறுமியான அகத் தமிமி, கடந்த ஆண்டு இஸ்ரேல் நாட்டு பாதுகாப்பு படை வீரர் ஒருவரை கன்னத்தில் அறைந்த குற்றச்சாட்டில் 8 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனை காலம் முடிந்ததையடுத்து நேற்று அவர் விடுவிக்கப்பட்டார்.

* மியான்மரின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 10 பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com