ஆளில்லா விமான தாக்குதல் நடத்தி வெனிசூலா அதிபரை கொல்ல முயற்சி


ஆளில்லா விமான தாக்குதல் நடத்தி வெனிசூலா அதிபரை கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 5 Aug 2018 10:30 PM GMT (Updated: 5 Aug 2018 8:21 PM GMT)

வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை ஆளில்லா விமான தாக்குதல் மூலம் கொல்ல முயற்சி நடந்தது. இதில் அவர் உயிர் தப்பினார்.

கராக்கஸ், 

வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை ஆளில்லா விமான தாக்குதல் மூலம் கொல்ல முயற்சி நடந்தது. இதில் அவர் உயிர் தப்பினார்.

தென் அமெரிக்க நாடான வெனிசூலா நாட்டில் அதிபராக இருந்த ஹியூகோ சாவேஸ் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அதிபர் பொறுப்பை ஏற்றவர் நிக்கோலஸ் மதுரோ (வயது 55). எண்ணெய் வளமிக்க அந்த நாடு கடுமையான பண வீக்கத்தால் தத்தளித்து வருகிறது.

இருப்பினும் அங்கு கடந்த மே மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, நிக்கோலஸ் மதுரோ பதவியை தக்க வைத்தார்.

இந்த நிலையில் அந்த நாட்டின் தலைநகரான கராக்கஸ் நகரில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில் திறந்த வெளியில் நடந்த ராணுவ தின நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசினார். இந்த விழாவில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு இருந்தனர்.

திடீரென வானத்தில் இருந்து பலத்த சத்தம் கேட்டது. உடனே நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவி சிலியா புளோரசும் பதற்றம் அடைந்து வானத்தை நோக்கி பார்த்தனர்.

அப்போது வெடிகுண்டுகளுடன் கூடிய 2 ஆளில்லா விமானங்கள் வெடித்து சிதறியதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவி சிலியா புளோரசும் காயமின்றி தப்பினர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கூடி இருந்த ராணுவ வீரர்கள் கலைந்து ஓடத்தொடங்கினர். இதனால் பெரும் பதற்றம் நிலவியது.

இது தொடர்பாக தகவல் தொடர்பு துறை மந்திரி ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் கூறும்போது, ‘‘அதிபர் நின்று உரை ஆற்றிய இடம் அருகே வெடிகுண்டுகளுடன் கூடிய 2 ஆளில்லா விமானங்கள் வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில் 7 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்’’ என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கொலை முயற்சியில் தப்பிய பின்னர் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, டி.வி.யில் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர், தன்னை கொல்ல முயற்சி நடந்து உள்ளதாக கூறினார். இந்த முயற்சியின் பின்னால் அண்டை நாடான கொலம்பியாவின் அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ் இருந்தார் என்பதில் சந்தேகம் இல்லை என கூறினார்.

இந்த தாக்குதலுக்கு தேவையான நிதி உதவியை அளித்தவர்கள் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ளதாகவும், அந்த பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பார் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் இல்லாதது என கொலம்பியா அரசு உடனடியாக மறுத்து விட்டது.

ஆனால் தகவல் தொடர்பு துறை மந்திரி ஜார்ஜ் ரோட்ரிக்ஸ், ஆளில்லா விமான தாக்குதலுக்கு வலதுசாரி எதிர்க்கட்சிதான் காரணம் என குற்றம் சாட்டினார். அவர்கள் தேர்தலில் தோற்ற பின்னர், இப்போது இந்த தாக்குதல் முயற்சியிலும் தோல்வி அடைந்து உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு இடையே பொதுமக்களையும், ராணுவத்தினரையும் கொண்டு உள்ள மர்ம கிளர்ச்சியாளர்கள் குழு ஒன்று, இந்த ஆளில்லா விமான தாக்குதலுக்கு பொறுப்பேற்று சமூக வலைத்தளம் ஒன்றில் பதிவு வெளியிட்டு உள்ளது.

வெனிசூலாவில் நிலவும் நிலவரத்தை கூர்ந்து கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story