ஆப்கானிஸ்தான் நகரை கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் இருதரப்பு இடையே கடும் மோதல்


ஆப்கானிஸ்தான் நகரை கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் இருதரப்பு இடையே கடும் மோதல்
x
தினத்தந்தி 10 Aug 2018 11:27 AM GMT (Updated: 10 Aug 2018 11:27 AM GMT)

ஆப்கானிஸ்தானில் கஜினி நகரைப் பிடிப்பதற்கு தலீபான் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினருடன் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். #Taliban #Afghanistan

காபூல்,
 
ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு படைகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகள் வெளிநாட்டு படைகளை குறிவைத்து தாக்குதலை முன்னெடுக்கிறார்கள். இதனால் பெரும் உயிரிழப்புகள் நேரிடுகிறது. இந்த நிலையில் அங்கு கஜினி மாகாணத்தின் தலைநகரான கஜினியை பிடிப்பதற்கு தலீபான் பயங்கரவாதிகள் திட்டம் தீட்டி நேற்று நள்ளிரவுக்கு பின்னர் களம் இறங்கினர். போலீஸ் சோதனைசாவடிகளை தீயிட்டு கொளுத்தினர். வீடுகள் மீது குண்டுகளை வீசினர். கடைகள் மீதும் தாக்குதல் தொடுத்தனர்.

எங்கு பார்த்தாலும் துப்பாக்கிச்சூடு சத்தமும், குண்டுகள் வெடிக்கும் சத்தமும் தான் கேட்டன. பல இடங்களில் புகை மண்டலங்கள் உருவாகின. தலீபான்களுக்கும் போலீஸ் படைகளுக்கும் இடையே பலத்த துப்பாக்கிச் சண்டைகளும் நடந்தன. இந்த சண்டையில் 14 போலீஸ்காரர்கள் பலியாகி உள்ளதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. அதே நேரத்தில் தலீபான்களை ஆப்கானிஸ்தான் படைகள் ஓட ஓட விரட்டி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் தலீபான்கள் பலர் பலியானதாகவும் கூறப்படுகிறது. அவர்களில் பலரது உடல்கள் தெருக்களில் கிடந்ததாகவும் தெரிய வந்து உள்ளது.

ஒரு பாலத்தின் கீழே 39 தலீபான்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக மற்றொரு தகவல் கூறுகிறது. மற்றொருபுறம் தலீபான்களை குறிவைத்து வான்வழி தாக்குதலும் நடத்தப்பட்டது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். சண்டையில் கஜினி நகரின் சில பகுதிகளை தாங்கள் கைப்பற்றி விட்டதாக தலீபான் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஹெராத் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய மற்றொரு தாக்குதலில் 6 போலீசார் உயிரிழந்தனர்.

Next Story