உலகைச்சுற்றி...

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
*வங்காளதேசத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்ட நபர் சுட்டுக்கொல்லப்பட்டார். போதை கடத்தல் கும்பலுடன் நடந்த துப்பாக்கி சண்டையின் போது துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் இறந்ததாக போலீசார் கூறினர். ஆனால் போலீசார்தான் அவரை சுட்டுக்கொன்றதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
*அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்பு ஏற்பட்டதாகவோ அல்லது யாரும் காயம் அடைந்ததாகவோ தகவல்கள் இல்லை. பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை.
*சிரியா விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக ரஷியா, பிரான்சு, துருக்கி மற்றும் ஜெர்மனி ஆகிய 4 நாடுகள் கலந்து கொள்ளும் உச்சிமாநாட்டுக்கு ஏற்பாடுகள் செய்து வருவதாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் நேற்று துருக்கி சென்றார்.
*தஜிகிஸ்தானில் 13 மலையேற்ற வீரர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று, மலைப்பகுதியில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது. இதில் வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர் ஊழியர்கள் என அதில் இருந்த 16 பேரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்கு மீட்பு பணிகளுக்காக 2 ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
*ஸ்பெயின் நாட்டின் விகோ நகரில் கடற்கரையோர இசை திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் திடீரென விழா மேடை சரிந்து கடலுக்குள் விழுந்தது. இதில் 266 பேர் காயமடைந்ததாகவும், இதில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் உள்ளூர் வானொலி அறிவித்தது.
Related Tags :
Next Story






