பாகிஸ்தானில் அடுத்த அதிபர் தேர்தல் செப்டம்பர் 4ந்தேதி நடைபெறும்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு


பாகிஸ்தானில் அடுத்த அதிபர் தேர்தல் செப்டம்பர் 4ந்தேதி நடைபெறும்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Aug 2018 11:44 AM GMT (Updated: 16 Aug 2018 11:44 AM GMT)

பாகிஸ்தானில் அடுத்த அதிபருக்கான தேர்தல் செப்டம்பர் 4ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்து உள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் அதிபராக பதவி வகித்து வருபவர் மம்னூன் உசைன்.  இந்த நிலையில் உசைனின் பதவி காலம் நிறைவடைய உள்ளது.  இதனையொட்டி அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அதிபர் தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டு உள்ளது.

அதன்படி வருகிற செப்டம்பர் 4ந்தேதி அதிபருக்கான தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை ஆகஸ்டு 27ந்தேதி வரை தாக்கல் செய்யலாம்.  வேட்பாளர்கள் அடங்கிய இறுதி பட்டியல் ஆகஸ்டு 30ந்தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில் நாடாளுமன்றம் மற்றும் 4 மாகாண சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரால் மறைமுக அடிப்படையில் அதிபர் தேர்வு செய்யப்படுவார்.

இந்த தேர்தல் மத்திய நாடாளுமன்ற மற்றும் மாகாண சட்டமன்ற கட்டிடங்களில் நடைபெறும்.  இந்தியாவின் ஆக்ரா நகரில் பிறந்தவரான உசைன், பிரிவினைக்கு பின்னர் பாகிஸ்தானின் கராச்சி நகரில் பெற்றோருடன் சென்று வசிக்க தொடங்கினார்.

அவர் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளராக கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பரில் நியமிக்கப்பட்டு அதிபராக தேர்வானார்.

இந்த நிலையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிக்கும் மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்), பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் முத்தஹிடா மஜ்லிஸ் ஐ அமல் ஆகிய தற்காலிக கூட்டணியாக இணைந்துள்ள 3 எதிர் கட்சிகளுக்கும் இடையே கடுமையாக போட்டி இருக்கும் என கூறப்படுகிறது.


Next Story