

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25ந்தேதி நடந்த தேர்தலில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சி அமைக்க போதிய எண்ணிக்கையை பெறாத அக்கட்சி பிற கட்சிகளின் உதவியை கோரியது.
இந்த நிலையில் பிரதமருக்காக நடந்த வாக்கெடுப்பில் இம்ரான் கான் 176 வாக்குகளும், ஷாபாஸ் ஷெரீப் 96 வாக்குகளும் பெற்றனர். இதனை அடுத்து இம்ரான் கான் இன்று பிரதமராக பதவியேற்று கொண்டார். அவருக்கு அதிபர் மம்னூன் உசைன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதனை தொடர்ந்து தொலைபேசி வழியே இம்ரான் கானை தொடர்பு கொண்ட தெரசா மே, அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அதன்பின் அவர், பாகிஸ்தானுடனான இங்கிலாந்தின் நட்புறவை மேம்படுத்த தனது அரசு தயாராக உள்ளது என கூறினார். பாகிஸ்தானின் புதிய அரசுக்கு முழு அளவில் உதவி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து 'மே'க்கு நன்றி தெரிவித்து கொண்ட கான், பணமோசடி தொடர்புடைய முறைகேடுகளை வேருடன் களைய இங்கிலாந்து அரசுடன் இணைந்து செயல்படும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். வளர்ந்து வரும் நாடுகளில் பணமோசடி ஒரு கடுமையான விவகாரம் ஆக உள்ளது. இதனை நிறுத்த இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் ஊழல் வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது பல பணமோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில், கான் கூறியிருப்பது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.