போக்குவரத்து நெரிசலால் பல்லாயிரம் கோடி இழப்பு!


போக்குவரத்து நெரிசலால் பல்லாயிரம் கோடி இழப்பு!
x
தினத்தந்தி 18 Aug 2018 10:08 AM GMT (Updated: 18 Aug 2018 10:08 AM GMT)

சுவிட்சர்லாந்தில் கடுமையான போக்குவரத்து நெரிசலால் ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சுவிட்சர்லாந்து நாட்டில் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் வருவாய் இழப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு, போக்குவரத்து நெரிசல் தொடர்பான வருவாய் இழப்பு என்பது சுமார் 1.9 பில்லியன் சுவிஸ் பிராங்க் எனத் தெரியவந்துள்ளது. இது கடந்த 2010-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7 சதவீதம் அதிகம் எனவும் அந்நாட்டு அரசு கூறுகிறது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக நேர விரயமும் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. அதோடு காலநிலை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதே காலகட்டத்தில் எரிபொருளுக்காகச் செலவிடும் தொகை, சுமார் 6 சதவீத சரிவைக் கண்டுள்ளது. அதேபோல, விபத்து தொடர்பான வருவாய் இழப்புகளும் சுமார் 8 சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது.

பொதுவான வருவாய் இழப்புதான் அதிகரித்திருக்கிறது. நாட்டின் உள்கட்டுமானத்தில் உரிய கவனம் செலுத்தினால் இது போன்ற வருவாய் இழப்புகளைத் தவிர்க்க முடியும் என சுவிஸ் அரசு கூறுகிறது.

மேலும் அலுவலகங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் பணி நேரத்தை மாற்றி அமைப்பதன் மூலம் சிறந்த தீர்வை எட்ட முடியும் எனவும் அரசு கருதுகிறது.

போக்குவரத்து நெரிசல்... இன்று இது உலகளாவிய பிரச்சினை! 

Next Story