‘பிரதமர்’ மனைவிக்காக வேலையைத் துறந்த கணவர்!


‘பிரதமர்’ மனைவிக்காக வேலையைத் துறந்த கணவர்!
x
தினத்தந்தி 18 Aug 2018 3:45 PM IST (Updated: 18 Aug 2018 3:45 PM IST)
t-max-icont-min-icon

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா, பிரசவ விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பியுள்ள நிலையில், குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்காக அவரது கணவர் வேலையைத் துறந்துள்ளார்.

தனது ஆறு வாரகால பிரசவ விடுப்பு முடிந்து, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார்.

38 வயதாகும் ஜெசிந்தா கடந்த ஜூன் மாதம் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தார். இதன் மூலம் ஒரு நாட்டின் பிரதமராக இருக்கும்போதே குழந்தை பெற்றெடுத்த இரண்டாவது பிரதமர் என்ற பெயரையும் பெற்றார்.

ஜெசிந்தா பிரசவ விடுப்பில் இருந்தபோது, தனது பணிகளை நாட்டின் துணைப் பிரதமரான வின்ஸ்டன் பீட்டர்சிடம் ஒப்படைத்திருந்தார்.

புதிதாகப் பிறந்த தனது மகள் நேவே டே அரோஹாவுடன் சில மகிழ்ச்சிகரமான வாரங்களைக் கழித்த பின்னர் பணிக்கு முழுமையாகத் திரும்புவதற்குத் தயாராக உள்ளதாக ஜெசிந்தா தெரிவித்தார்.

‘‘நியூசிலாந்து மக்கள், எனது அணியினர் மற்றும் செயல் பிரதமரின் உதவியின் காரணமாக நேவேயுடன் என்னால் அருமையான நேரத்தைக் கழிக்க முடிந்ததாக உணருகிறேன்’’ என்று ஒரு நிருபரிடம் ஜெசிந்தா கூறினார்.

‘‘ஆனால் நிச்சயமாக இது ஒரு தனிப்பட்ட சூழ்நிலை. நான் பணியாற்றுவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன்’’ என்றார் அவர்.

நேவே பிறந்தவுடன் சில வாரங்களை ஜெசிந்தா குடும்பத்தினர் அவர்களின் வீடு அமைந்துள்ள ஆக்லாந்தில் செலவிட்டனர். தற்போது, நியூசிலாந்தின் நாடாளுமன்றம் அமைந்திருக்கும் வெலிங்டன் நகருக்குத் திரும்பியிருக்கின்றனர்.

ஜெசிந்தாவின் கணவரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான கிளார்க் கைபோர்ட், தனது மனைவி நாட்டை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துவதற்காக தான் வீட்டிலேயே இருந்து குழந்தையைப் பார்த்துக்கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய ஜெசிந்தா, பல பெண்களுக்குக் கிட்டாத அதிர்ஷ்டம் தனக்குக் கிடைத்திருப்பதாகக் கூறுகிறார்.

இதுதொடர்பாக அவர், ‘‘என்னுடைய கணவர் எப்போதும் எனக்குத் துணை நிற்கிறார். ஒரு பெற்றோருக்கான பொறுப்புணர்வில் பெருமளவை ஏற்றுக்கொண்டு அவர் செயல்படுகிறார்’’ என்றார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியூசிலாந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெசிந்தா, தனக்கும் கிளார்க்குக்கும் குழந்தை பிறக்கவுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தார்.

1856-ல் இருந்து இதுவரையிலான காலத்தில் நியூசிலாந்தின் இளம் பிரதமராக விளங்கும் ஜெசிந்தா, தான் மகப்பேறு விடுமுறையில் இருந்தபோதுகூட அமைச்சரவை சார்ந்த கோப்புகளைப் படித்ததுடன், முக்கியமான விவகாரங்களில் அரசுக்கு ஆலோசனையும் வழங்கினார்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான மறைந்த பெனாசிர் பூட்டோதான், ஒரு நாட்டின் பிரதமராக இருக்கும்போதே குழந்தையை பெற்றெடுத்த முதல் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story