ஏமனில் 40 குழந்தைகளை கொல்ல பயன்பட்ட வெடிகுண்டை விற்றது அமெரிக்கா; அறிக்கையில் தகவல்

வடக்கு ஏமனில் 40 குழந்தைகள் உள்பட 51 பேரை கொல்வதற்கு பயன்பட்ட வெடிகுண்டு அமெரிக்காவால் விற்பனை செய்யப்பட்டது என அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
வாஷிங்டன்,
ஏமன் நாட்டின் வடக்கே கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதியில் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த நிலையில் சவூதி தலைமையிலான கூட்டு படையினர் கடந்த 9ந்தேதி அதன்மீது வான்வழி தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் 40 குழந்தைகள் உள்பட 51 பேர் பலியாகினர். 56 குழந்தைகள் உள்பட 79 பேர் காயமடைந்தனர். இதற்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு எம்.கே. 82 ரகத்தினை சேர்ந்தது என தெரிய வந்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு அக்டோபரில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள சனா நகரில் இதேபோன்று வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் இறுதி சடங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட 140 பேர் கொல்லப்பட்டனர்.
இதனை சவூதி அரேபியா பயன்படுத்தியது தெரிய வந்தது. இதனை அடுத்து முன்னாள் ஜனாதிபதியான ஒபாமா அந்நாட்டுக்கு வெடிகுண்டு விற்பனை செய்ய தடை விதித்து விட்டார்.
ஆனால் இந்த தடையை கடந்த 2017ம் ஆண்டு அதிபராக பதவியேற்ற டிரம்ப் நீக்கினார்.
இந்த நிலையில், வடக்கு ஏமனில் 40 குழந்தைகள் உள்பட 51 பேரை கொல்வதற்கு பயன்பட்ட வெடிகுண்டு அமெரிக்காவால் விற்பனை செய்யப்பட்டு உள்ளது என அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
இந்த வெடிகுண்டு சவூதி அரேபியா நாட்டுடன் மேற்கொண்ட வெளியுறவு துறையுடனான ஒப்பந்தத்தினால் விற்கப்பட்டு உள்ளது. இந்த வெடிகுண்டை பரிசோதித்த நிபுணர்கள் தெரிவித்து உள்ள தகவலின் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டு உள்ளது.






