காற்று மாசுபாட்டினால் இந்தியரின் சராசரி வாழ்நாள் 1.5 வருடம் குறைகிறது; ஆய்வில் தகவல்

இந்தியரின் சராசரி வாழ்நாள் காற்று மாசுபாட்டினால் 1.5 வருடம் குறைகிறது என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
ஹூஸ்டன்,
உலக அளவில் காற்று மாசுபாடு பெரிய அளவில் சுற்று சூழலுக்கு தீங்கு விளைவிக்கின்றது. இதனால் மனிதர்களின் வாழ்நாள் குறைகிறது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
காற்று மாசுபாடு மற்றும் மனிதர்களின் வாழ்நாள் பற்றிய இணைந்த ஆய்வு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில் அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலை கழக ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். இந்த ஆய்வில் 2.5 மைக்ரான்கள் அளவிற்கு சிறிய துகள்கள் எடுத்து கொள்ளப்பட்டன. இந்த சிறிய துகள்கள் நுரையீரல்களுக்குள் ஆழமுடன் சென்று மாரடைப்புகள், ஸ்டிரோக்குகள், சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஆகியவற்றை உருவாக்கும் ஆபத்து உள்ளது.
இந்த துகள்கள் மின் உலைகள், கார்கள் மற்றும் கனரக வாகனங்கள், நெருப்பு, வேளாண் மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் ஏற்படுகின்றன.
இதனால் பெரிய அளவில் காற்று மாசுபாடு அடைந்துள்ள வங்காளதேசம் (1.87 ஆண்டுகள்), எகிப்து (1.85 ஆண்டுகள்), பாகிஸ்தான் (1.56 ஆண்டுகள்), சவூதி அரேபியா (1.48 ஆண்டுகள்), நைஜீரியா (1.28 ஆண்டுகள்) மற்றும் சீனா (1.25 ஆண்டுகள்) ஆகிய நாடுகளில் வாழ்நாளில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது என கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த ஆய்வின்படி இந்தியாவில் 1.53 ஆண்டுகள் வாழ்நாள் பாதிப்பு ஏற்படுகிறது.
ஆசியாவில் காற்று மாசுபாடுகளால் ஏற்படும் உயிரிழப்பு ஆபத்து குறைக்கப்படும் என்றால் 60 வருடங்கள் வாழ கூடிய ஒருவர் 15 முதல் 20 சதவீதம் கூடுதலாக 85 அல்லது அதற்கு மேல் வாழ முடியும் என ஆய்வின் தலைவர் ஜோசுவா ஆப்தே தெரிவித்துள்ளார்.
காற்றின் தரம் நல்ல முறையில் இருந்ததென்றால் உலக அளவில் மனிதர்களின் வாழ்நாள் நீட்டிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.






