பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அமைச்சரவை விரிவாக்கம்; 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு


பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அமைச்சரவை விரிவாக்கம்; 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு
x
தினத்தந்தி 11 Sep 2018 8:22 AM GMT (Updated: 11 Sep 2018 8:25 AM GMT)

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அமைச்சரவையில் 6 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்று கொண்டனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25ந்தேதி பிரதமருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

ஆனால் ஆட்சியமைக்க போதுமான இடங்களை அந்த கட்சியால் பெற முடியாத நிலையில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து இம்ரான் கான் ஆட்சி பொறுப்பேற்றார்.  அவர் கடந்த ஆகஸ்டு 18ந்தேதி 22 வது பிரதமராக பதவியேற்று கொண்டார்.

இதற்காக இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.  அவருக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை புதிய ஜனாதிபதியாக ஆரிப் ஆல்பி பதவியேற்று கொண்டார்.  அவர் அந்நாட்டின் 13வது ஜனாதிபதி ஆவார்.

இந்த நிலையில், உமர் அயூப், அலி முகமது கான் மெஹர் மற்றும் சையது அலி ஹைதர் ஜைதி ஆகிய 3 பேர் மத்திய மந்திரிகளாக இன்று பதவியேற்றனர்.  
இதேபோன்று முகமது ஷபீர் அலி, முராட் சயீத் மற்றும் முகமது ஹமத் அசார் ஆகியோர் இணை மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர்.  இவர்களுக்கு ஜனாதிபதி இல்லத்தில் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர், மத்திய அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் இணை மந்திரியான உமர் அயூப் கான் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரியில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியில் சேர்ந்தார்.

Next Story