ஆண்டுக்கு 1.60 கோடி பேர் தற்கொலை முயற்சி ; 8 லட்சம் பேர் தற்கொலை -உலக சுகாதார அமைப்பு


ஆண்டுக்கு 1.60 கோடி பேர் தற்கொலை முயற்சி ;  8 லட்சம் பேர் தற்கொலை -உலக சுகாதார அமைப்பு
x
தினத்தந்தி 11 Sep 2018 8:59 AM GMT (Updated: 11 Sep 2018 8:59 AM GMT)

பல்வேறு பிரச்சினைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.


உலக தற்கொலைத் தடுப்பு நாளை முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பும், கனடாவின் மன நல ஆணையமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பல்வேறு பிரச்சினைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. வறுமை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில்தான் அதிகளவில் தற்கொலைகள் நிகழ்கிறது.  2016-ம் ஆண்டு அதிக தற்கொலைகள் நிகழ்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 15 - 29 வயதுள்ளவர்களே அதிகம் தற்கொலை செய்து கொள்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கும் எண்ணிக்கையை விட 20 மடங்கு அதிகமானோர் தற்கொலைக்கு முயல்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தால், சுமார் 20 பேர் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.

குடும்பப் பிரச்சினை, மன உளைச்சல் என பல்வேறு காரணங்களுக்காக ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுக்கிறார். வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களை அதிகம் கொண்ட நாடுகளில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்ளும் முறை அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

தற்கொலை செய்து கொள்வதில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதைத் தொடர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்வதும், தீக்குளிப்பதும் அதிகம் உள்ளன.

பணக்கார நாடுகளில் நடக்கும் தற்கொலைச் சம்பவங்களுக்கு பெரும்பாலும் மனநல பாதிப்பு அல்லது போதைப் பொருள் பழக்கம் போன்றவை காரணங்களாக அமைகின்றன. அதாவது அந்த நொடியில் ஏற்படும் மன உந்துதலால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

போதைப் பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது, மக்களின் மன நலனைக் காக்க நடவடிக்கை எடுப்பது போன்றவை தற்கொலைகளைத் தடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story