பிலிப்பைன்சை பந்தாடியது ‘மங்குட்’ புயல்


பிலிப்பைன்சை பந்தாடியது ‘மங்குட்’ புயல்
x
தினத்தந்தி 15 Sep 2018 11:30 PM GMT (Updated: 15 Sep 2018 8:06 PM GMT)

பிலிப்பைன்சின் மங்குட் புயலுக்கு, 12 பேர் பலியானதுடன், மீட்பு பணியின்போது 2 வீரர்கள் பலியாயினர்.

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டை ‘மங்குட்’ புயல் தாக்கி பெரும் சேதத்தை விளைவித்தது. இந்தப் புயலுக்கு 12 பேர் பலியானதுடன் மீட்பு பணியின்போது 2 வீரர்கள் உயிரிழந்தனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் லுசான் தீவை ‘மங்குட்’ புயல் நேற்று தாக்கியது. இந்தப் புயல் ஆண்டின் மிக வலுவான புயல் என்ற வகையில் 5-ம் பிரிவு புயல் என வகைப்படுத்தப்பட்டு இருந்தது.

மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் தொடங்கி 305 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசியது. கன மழையும் பெய்தது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பலத்த காற்றின் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சாய்ந்தன. மின்வினியோகம் தடை பட்டு உள்ளது. வீடுகள் இருளில் மூழ்கின. தகவல் தொடர்பு சேவையும் முடங்கி உள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன.

டுகுகாரோவ் நகரில் உள்ள அனைத்து கட்டிடங்களும் ‘மங்குட்’ புயலால் சேதம் அடைந்து உள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த புயலின் பிடியில் 40 லட்சம் பேர் சிக்கி உள்ளனர். கடலோரப்பகுதிகளில் பல்லாயிரகணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

பல இடங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. மழைக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. அமெரிக்காவின் ‘புளோரன்ஸ்’ புயலை விட இந்தப் புயல் தாக்கம் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

மீட்பு பணிகளை பிலிப்பைன்ஸ் அரசு முடுக்கி விட்டு உள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும்போது 2 மீட்பு படை வீரர்கள் பலியாகி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதேபோன்று கடலோர நகரங்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிலிப்பைன்சை பொறுத்தமட்டில் இதுவரை இல்லாத வகையில் இந்த புயலுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்ததாக அந்த நாட்டு அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. பல மாகாணங்களில் மக்களுக்கு முன் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு இருந்தன. கடல், வான்வழி பயணங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருந்தனர்.

மக்களை காப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடர்டோவின் செய்தி தொடர்பாளர் பிரான்சிஸ் டாலன்டினோ கூறினார். மேலும் அவர் கூறும்போது, “ நேற்று இரவு (நேற்று முன்தினம் இரவு) நான் அதிபரை சந்தித்தபோது அவர், மக்களை காப்பாற்றுங்கள் என்று வலியுறுத்திச்சொன்னார்” என்று குறிப்பிட்டார்.

மங்குட் புயல் 900 கி.மீ. சுற்றளவை கொண்டதாகும். இந்தப் புயல் நேற்று பிலிப்பைன்சை பந்தாடி விட்டு அதைத் தொடர்ந்து சீனாவை நோக்கி நகரத் தொடங்கி உள்ளதாக தெரிய வந்து இருக்கிறது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘மங்குட்’ புயல், மதிய வாக்கில் ஹாங்காங்கை கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வுத்தகவல்கள் கூறுகின்றன.



Next Story