உலக செய்திகள்

தோட்டம் அமைத்தார்.. குரங்குகளை வளர்த்தார்.. - ரீட்டா மில்ஜோ! + "||" + The garden was set up , Grow up the monkeys - Rita Milzo!

தோட்டம் அமைத்தார்.. குரங்குகளை வளர்த்தார்.. - ரீட்டா மில்ஜோ!

தோட்டம் அமைத்தார்.. குரங்குகளை வளர்த்தார்.. - ரீட்டா மில்ஜோ!
இவர் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண்மணி. இவர் இளம் வயதில் ஒரு நாள் தனது வீட்டின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, லங்கூர் இன குரங்கு ஒன்று காயம்பட்டு சாலையோரத்தில் கிடப்பதைப் பாா்த்தார்.
குரங்கு பரிதாபமாக துடித்துக் கொண்டிருந்தது. அதனை தூக்கி வந்து வீட்டில் வைத்து சிகிச்சை செய்தார். சில நாட்களில் அது பூரண குணமடைந்து விட்டது. அதேபோல் காயமடைந்த லங்கூர் இன குரங்குகளை எல்லாம் இவர் தூக்கி வந்து சிகிச்சை அளித்தார். தென்ஆப்பிரிக்க மக்களுக்கு பொதுவாக இந்த இன குரங்குகளை பிடிப்பதில்லை. அவர்கள் ரசிக்கும் அளவுக்கு அதன் தோற்றம் இல்லாமல் இருப்பதுதான் அதற்கான காரணம். மக்களின் வெறுப்புக்கு காரணமான இவை எப்போதாவது அவர்கள் முன் சென்றுவிட்டால் அவ்வளவுதான் கல்லால் துரத்தி அடிப்பார்கள். அதனை கொல்லும் வரை அவர்கள் கோபம் அடங்காது.

`உலகில் உள்ள எல்லாப் பிராணிகளும் இறைவனால் படைக்கப்பட்டவை. இறைவனை நேசிப்பவர்கள் எல்லா உயிரினங்களையும் நேசிக்க வேண்டும். அப்படி நேசிக்கத் தெரியாதவர்கள் அவைகளை துன்புறுத்தாமலாவது இருக்க வேண்டும். சாகும் வரை அடிக்கும் அளவுக்கு அவைகள் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தது? உங்கள் குழந்தைகளை யாராவது இப்படி துன்புறுத்தினால் தாங்கிக் கொள்வீர்களா?' என்று கேட்டு, ரீட்டா மில்ஜோ ஆங்காங்கே விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். அது பற்றி புத்தகமும் எழுதினார். காயம் அடைந்த குரங்குகளுக்கெல்லாம் தொடர்ந்து ஆதரவளித்து, பராமரித்தார்.

தனக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை அவைகளின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தினார். அவைகளுக்கு உணவும் சிகிச்சையும் அளித்து பராமரித்தார். 400 லங்கூர் இன குரங்குகள் அவரால் மறுவாழ்வு பெற்றன. அதை ஒரு சேவையாகவே செய்துவந்தார். மற்றவர்களிடம் அடி வாங்கியே பழக்கப்பட்ட லங்கூர்களுக்கு இவருடைய அன்பு பெரும் அதிர்ஷ்டமாக அமைந்தது.இதற்கிடையில் ஒரு விசித்திரமான விஷயமும் நடந்தது. ஒரு தாய் லங்கூரை சிலர் அடித்துக் கொன்றுவிட அதன் உடலை குட்டிக் குரங்கு வெகு தூரம் இழுத்துக் கொண்டே வந்திருக்கிறது. ரீட்டாவின் இருப்பிடம் தெரிந்து அங்கு வரை உடலை இழுத்து வந்திருக்கிறது. அந்தக் காட்சி அவரை நெகிழ வைத்து விட்டது. தாயை புதைத்து விட்டு அந்த குட்டியை தனது பராமரிப்பில் எடுத்துக் கொண்டார். அதை அங்குள்ள மக்கள் பார்த்து நெகிழ்ந்தார்கள்.

அவர் குரங்குகளை தனித்தனி குழுவாக பிரித்து வளர்த்தார். குழு ஒன்றுக்கொன்று அனுசரணையாக, அன்பாக செயல்பட கற்றுக்கொடுத்தார். குணமடைந்து அவை ஓரளவு பயிற்சி பெற்றதும் அவைகளை குழுகுழுவாக காட்டில் கொண்டுபோய் விட்டார். ஆனாலும் சிறிது காலத்தில் அவை மீண்டும் ரீட்டா மில்ஜோவை தேடி வர ஆரம்பித்தன. அவைகளின் உணவுத் தேவைக்காகவே அவர் தானியங்களையும், பழங்களையும் பயிரிட்டு வளர்த்தார்.

அங்கோலாவில் இவரால் காப்பாற்றப்பட்ட குரங்கு ஒன்று, வெகுகாலமாக இவருடனே வசித்து வந்தது. ``இது என் குழந்தை போன்று என்னிடம் வளர்கிறது. என்னைப் பிரிந்து எங்கும் போகாது. அது தனது இனத்தோடு சேர்ந்து வாழட்டும் என்று காட்டில் கொண்டுபோய் விட்டேன். மறுநாள் காலையில் திரும்பி வந்து என் வீட்டு வாசலில் காத்திருந்தது. பின்பு என்னுடனே வைத்துக் கொண்டேன்” என்றார், ரீட்டா மில்ஜோ. இந்த பாசக்கார பெண்மணியை ‘லங்கூர்களின் அன்னை தெரசா’ என்று அந்த நாட்டு மக்கள் அழைக்கிறார்கள்.

இறந்து போன குரங்குகளை புதைக்க சில ஏக்கர் நிலத்தை ஒதுக்கியிருக்கும் இவர், `நான் இறந்துவிட்ட பின்பு என்னையும், என் பிரியமான லங்கூர்களுக்கு மத்தியிலே புதைத்து விடுங்கள்' என்று தனது இறுதி ஆசையையும் வெளிப் படுத்தியிருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்ததும், அவர் விரும்பியது போலவே குரங்குகள் புதைக்கப்பட்ட பகுதியிலே அடக்கம் செய்யப்பட்டார்.

ரீட்டா மில்ஜோவின் வாழ்க்கை சோகமானது. இவரது கணவரும், 17 வயது மகளும் விமான விபத்தில் இறந்துவிட்டார்கள். ரீட்டா தனிமையில் வாழ்ந்து வந்தார். அந்த தனிமையை போக்கியது இந்த லங்கூர்கள்தான்.