பிலிப்பைன்சை தொடர்ந்து சீனாவை பந்தாடிய மங்குட் புயல்


பிலிப்பைன்சை தொடர்ந்து சீனாவை பந்தாடிய மங்குட் புயல்
x
தினத்தந்தி 17 Sep 2018 11:15 PM GMT (Updated: 17 Sep 2018 7:28 PM GMT)

சீனாவில் மங்குட் புயல் காரணமாக 25 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பீஜிங்,

பிலிப்பைன்ஸ் நாட்டின் லுசான் தீவை ‘மங்குட்’ என்கிற புயல் சின்னாபின்னமாக்கிவிட்டது. இந்த புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 64-ஐ எட்டி உள்ளது.

இதற்கிடையில் இந்த மங்குட் புயல் நேற்று முன்தினம் சீனாவை நோக்கி விரைந்தது. அந்நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை மங்குட் புயல் கடுமையாக தாக்கியது. அங்கு மணிக்கு 162 கி.மீ தூரத்தில் பலத்த காற்று வீசியதுடன் கனமழையும் கொட்டி தீர்த்தது.

சீனாவில் 1949-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த புயல் இதுவாகும். இதனால் இந்த மங்குட் புயல் ‘புயல்களின் அரசன்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த புயலால் குவாங்டாங் மற்றும் ஹூனான் மாகாணங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. இந்த 2 மாகாணங்களிலும் இருந்து சுமார் 25 லட்சம் மக்கள் வெளியேற்றப் பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். மங்குட் புயலுக்கு குவாங்டாங் மாகாணத்தில் 2 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் தெற்கு பகுதியை சின்னாபின்னமாக்கிய மங்குட் புயல் நேற்று மேற்கு பகுதியை நோக்கி நகர தொடங்கியது. அங்கு கியாசூ, சோங்கிங், யுன்னான் ஆகிய மாகாணங்களில் மங்குட் புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

மேலும் மங்குட் புயல் இன்று (செவ்வாய்க் கிழமை) வலு இழக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Next Story