ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற நவாஸ் ஷெரீப்பை விடுதலை செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு


ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற நவாஸ் ஷெரீப்பை விடுதலை செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 19 Sep 2018 11:05 AM GMT (Updated: 19 Sep 2018 11:05 AM GMT)

ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள நவாஸ் ஷெரீப் மற்றும் அவரின் மகளை விடுதலை செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இஸ்லாமாபாத்,

இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் ஊழல் பணத்தில் சொகுசு வீடுகள் வாங்கியதாக நவாஸ் ஷெரீப் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ‘அவென்பீல்டு’ வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில், நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என அந்த கோர்ட்டு முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

அவர்கள் கைது செய்யப்பட்டு ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டனர்.  இந்த நிலையில் கடந்த 11ந்தேதி நவாஸ் ஷெரீப்பின் மனைவி பேகம் குல்சூம் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார்.

இந்நிலையில், ஷெரீப், அவரது மகள் மற்றும் மருமகன் ஆகியோர் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் ஊழல் பணத்தில் ஆடம்பர பங்களாக்கள் வாங்கியதில் தொடர்புடைய வழக்கில் இருந்து விடுவிக்க கோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த வழக்கு 2 பேர் கொண்ட நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  இதில் ஷெரீப், அவரது மகள் மற்றும் மருமகன் ஆகிய 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.  அவர்கள் தலா ரூ.5 லட்சத்திற்கு ஜாமீன் தொகை செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

Next Story