நாப்கினுக்காக பாலியல் தொழிலில் ஈடுபடும் கென்ய பெண்கள் அதிர்ச்சி தகவல்


நாப்கினுக்காக பாலியல் தொழிலில் ஈடுபடும் கென்ய பெண்கள் அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 20 Sep 2018 9:36 AM GMT (Updated: 20 Sep 2018 9:36 AM GMT)

கென்யாவில் வறுமையில் இருக்கும் பெண்கள் தங்களுடைய மாதவிடாய் காலத்தின் போது, சானட்டரி நாப்கினுக்காக டிரைவர்களிடம் உறவு வைத்துக் கொள்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


கென்யாவில் யுனிசெப் ஆய்வு மேற்கொண்டதில், வறுமையில் இருக்கும் 65 சதவீத பெண்கள் சாணிட்டரி நாப்கினிக்காக ஆண்களிடம் உறவு வைத்துக் கொள்கின்றனர். ஏனெனில் அவர்களிடம் சாணிட்டரி நாப்கின் வாங்குவதற்கு போதுமான வருமானம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து கென்யாவில் இருக்கும் யுனிசெப்பின் தலைமை அதிகாரி வாட்டர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

இங்கிருக்கும் பெண்கள் இரண்டு காரணங்களுக்காக போடா போடா ஓட்டுனர்கள், டாக்ஸி ஓட்டனர்களிடம் உறவு வைத்துக் கொள்கின்றனர். ஒன்று அவர்களின் வறுமை, மற்றொன்று அவர்களிடம் சானிட்டரி வாங்குவதற்கு கூட பணம் இல்லாதது. அதுமட்டுமின்றி இங்கிருக்கும் பெரும்பாலான கிராமங்களில் சானிட்டரி அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை, வெளியூருக்கு சென்று வாங்குவதற்கு என்றால், அந்தளவிற்கு போக்குவரத்து வசதியில்லை.

எப்படியாவது வெளியூருக்கு சென்று சானிட்டரி வாங்கிவிடலாம் என்று நினைத்தால், அவர்கள் பேருந்தில் சென்று திரும்புவதற்கு போதுமான பணமும் இருப்பதில்லை.இதன் காரணமாகவே அவர்கள் அந்த வழியில் வரும் லாரி ஓட்டுனர்கள் போன்றவர்களிடம் சானிட்டரி வாங்கிக் கொண்டு அவர்களிடம் உறவு வைத்துக் கொள்கின்றனர்.

இதையும் ஓட்டுனர்கள் தங்களுக்கு சாதகமாக்கி கொள்கின்றனர். மேலும் கென்யாவில் இருக்கும் 7 சதவீத பெண்கள் மாதவிடாய் காலத்தின் போது, பழைய துணிகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். அப்படி இல்லையென்றால் கோழியின் இறகை பயன்படுத்திக் கொள்கின்றனர். மேலும் அங்கிருக்கும் ஒரு சம்பவம் குறித்து விளக்குகையில், பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவருக்கு பள்ளியில் இருந்த போது முதன் முறையாக மாதவிலக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது அவரின் சகோதரி டிரைவர் ஒருவரின் வாகனத்தில் ஏற்றிவிட்டு வீட்டில் இறக்கிவிடும் படி கூறியுள்ளார். அப்போது அந்த நபர் செல்லும் வழியில் ஒரு பையை கொடுத்துள்ளார். அதில் சானிட்டரி நாப்கின் இருந்துள்ளது.

அந்த சகோதரி இது குறித்து பெற்றோரிடம் கூற வேண்டாம் என்று அந்த டிரைவரிடம் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி மாதந்தோறும் அவரிடமே வாங்கி வரும் படி கூறியுள்ளார். இதை பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் அந்த சிறுமியிடம் பலவந்தமாக உறவு வைத்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமும் ஆகியுள்ளார். அவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது. 

பொதுவாக கென்யாவில் இருக்கும் பெண்களுக்கு முதல் மாதவிடாய் வந்துவிட்டால், அவர்கள் திருமணத்திற்கு தயராகிவிட்டதாக எண்ணுவதாகவும் கூறப்படுகிறது. மாதவிடாய் காலத்தின் போது சிறுமிகள் பள்ளிக்கும் செல்வதில்லை, காரணம் பள்ளியில் போதுமான பாதுகாப்பு இருக்காது, கழிவறையும் சுத்தமாக இருக்காது. இதனால் அவர்கள் வீட்டிலே இருந்துவிடுகின்றனர். இந்நிலையில் கென்ய அரசாங்கமும், யுனிசெப்பும் சேர்ந்து 335 பள்ளிகளில் இந்த சானிட்டரி நாப்கின்கள் கிடைப்பதற்கு வழி செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்கு கென்யா அரசு அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story