

ஜோகன்னெஸ்பர்க்,
தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் கவுன்சிலராக இருந்தவர் கெஸ்சி நாயர். கடந்த 2005ம் ஆண்டில் மோசடி செய்த குற்றத்திற்காக 6 வருட சிறை தண்டனை பெற்றார்.
இந்த நிலையில் முகநூலில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. அதில் அவர், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுக்கு எதிராக இனவெறி கருத்து தெரிவித்துள்ளார். இனவெறி காலத்தில் கறுப்பின மனிதர்களுக்கு எதிராக கூறப்படும் காபிர் என்ற வார்த்தையை அதிபர் சிரிலுக்கு எதிராக கெஸ்சி பயன்படுத்தி உள்ளார்.
அதில் தொடர்ந்து, உண்மையான ஜனநாயக நாடு என கூறப்படும் இந்த நாட்டை மோசடி செய்த சிரில் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும். இந்த நாட்டை நசுக்கிய, தேச துரோகம் செய்ததற்காக மற்றும் வன்முறை, மோசம் ஆன சுகாதார நலம், வறுமை போன்ற அனைத்து குற்றங்களுக்காகவும் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
எனது வாழ்வின் மீதமுள்ள காலத்தில் நான் சிறைக்கு செல்லவோ அல்லது துப்பாக்கி குண்டுக்கு பலியாகவோ தயார். உண்மை துன்புறுத்தும் என்ற ஒன்றை கூறவே நான் விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ 5 நிமிடங்கள் வரை ஓடுகிறது. இதனை அடுத்து அதிபருக்கு எதிராக பேசிய குற்றத்திற்காக கெஸ்சி நாயர் கைது செய்யப்பட்டு உள்ளார்.