தான்சானியாவில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து: 44 பேர் பலியான பரிதாபம்

தான்சானியாவில் படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் பரிதாபமாக பலியாகினர்.
தான்சானியாவில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து: 44 பேர் பலியான பரிதாபம்
Published on

கம்பலா,

கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா நாடுகளுக்கு இடையே லேக் விக்டோரியா எனும் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியானது சுமார் 69 ஆயிரம் கிமீ பரப்பளவும் 272 அடி ஆழமும் உடையதாகும்.தன்சானியா நாட்டில் உள்ள உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொறு தீவுக்கு இந்த ஏரி வழியாக படகு மூலம் 400-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அதிகளவிலான பயணிகளை ஏற்றி சென்றதால் எதிர்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 44 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து 100-க்கும் மேற்பட்டவர்களை பத்திரமாக மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் 32 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படகில் பயணம் செய்த மேலும் பலரை காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மோசமான பராமரிப்பு மற்றும் அதிக அளவிலான பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்வதால், லேக் விக்டோரியா ஏரியில் விபத்து ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக கூறப்படுகிறது. கடந்த 1996 ஆம் ஆண்டு இதே ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் 800 பேர் பலியானது நினைவு கூறத்தக்கது. அதேபோல், 2011-ல் ஏற்பட்ட விபத்தில், 200 பேர் பலியாகினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com